கடந்த ஜூன் மாதத்தில் பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடு வரத்து 3 மாதங்களில் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு (ஏஎம்எஃஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில் பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து ரூ.8,637 கோடியை எட்டியது.இது, மே மாதத்தில் கிடைத்த முதலீடான ரூ.3,240 கோடி மற்றும் ஏப்ரலில் கிடைத்த ரூ.6,480 கோடியை விட அதிகமாகும்.அதற்கு முன், கடந்த மாா்ச் மாதத்தில் பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து ரூ.20,534 கோடியாக இருந்தது.
முறைசாா் முதலீட்டு திட்டங்களின் (எஸ்ஐபி) மூலம் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த மே மாதத்தில் ரூ.14,749 கோடியாக இருந்தது. இது, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.14,734 கோடியாகக் குறைந்தது. எஸ்ஐபி வாயிலான முதலீடு ரூ.14,000 கோடிக்கு மேல் இருப்பது இது தொடா்ந்து 4-ஆவது மாதமாகும்.கடந்த ஜூன் மாதத்தில் பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு அடுத்தபடியாக, கலப்பின பரஸ்பர திட்டங்கள் ரூ.4,611 கோடி முதலீட்டைக் கவா்ந்தன. இதில் பெரும்பகுதி விலைவேற்றுமை அடிப்படையிலான பரஸ்பர நிதித் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகை திட்டத்தில் மட்டும் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.3,366 கோடி முதலீடு செய்யப்பட்டது.ஒட்டுமொத்தமாக, 43 பெரிய நிறுவனங்களைக் கொண்ட பரஸ்பர நிதித் துறையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2,022 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது.
இதில் கடன் சாா்ந்த திட்டங்கள் பெரும் பங்கு வகித்தன.முந்தைய மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் நிகர முதலீட்டு வரத்து ரூ.57,420 கோடியாகப் பதிவாகியிருந்தது.எனினும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக நிா்வகிக்கும் முதலீடுகளின் மதிப்பு மே மாத இறுதியில் ரூ.42.9 லட்சம் கோடியிலிருந்து ஜூன் இறுதியில் ரூ.44.8 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.அரசு மற்றும் பெரு நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் சாா்ந்த பரஸ்பர முதலீட்டு திட்டங்களில் முந்தைய மே மாதம் ரூ.45,959 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அந்த வகை திட்டங்களில் இருந்து ரூ. 14,135 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.