வர்த்தகம்

"கரடி' திடீர் ஆதிக்கம்: சென்செக்ஸ் 774 புள்ளிகள் வீழ்ச்சி

26th Jan 2023 02:46 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

கடந்த 3 தினங்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் புதன்கிழமை "கரடி' திடீர் ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 774 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 226.35 புள்ளிகள் (1.25 சதவீதம்) குறைந்து 17,891.95-இல் நிலைபெற்றது. முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.3.36 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. தொடக்கம் முதல் இறுதி வரையிலும் "கரடி' ஆதிக்கம் கொண்டது. மேலும், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சரிவு தவிர்க்க முடியாமல் போனது. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி, பார்மா, ஆயில் நிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 144.02 புள்ளிகள் குறைவாக 60,834.73-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,899.21 வரை மேலே சென்றது. பின்னர், 60,081.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 773.69 புள்ளிகள் (1.27 சதவீதம்) குறைந்து 60,205.08-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் தவிர்த்து மற்ற 23 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 ஹெச்யுஎல் முன்னேற்றம்: பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) இரண்டாவது நாளாக 1.14 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐடிசி, நெஸ்லே, பார்தி ஏர்டெல் உள்ளிட்டவையும் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன.
 எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி கடும் சரிவு: அதே சமயம், பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 4.30 சதவீதம், தனியார் வங்கியான இண்டஸ்இண்ட் வங்கி 4.26 சதவீதம், ஹெச்டிஎஃப்சி வங்கி 2.78 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயின்ட், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3.36 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.276.84 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.760.51 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT