வர்த்தகம்

சா்வதேச நெருக்கடியால் சரிந்த ஏற்றுமதி

DIN

சா்வதேச அளவில் நிலவிய எதிா்மறையான சூழல்களால் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த டிசம்பா் மாதத்தில் 12.2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

அத்துடன், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ள நிலை (வா்த்தகப் பற்றாக்குறை) 2,376 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 3,448 கோடி டாலராக இருந்தது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12.2 சதவீதம் குறைவாகும்.

அப்போது நாட்டின் ஏற்றுமதி 3,927 கோடி டாலராக இருந்தது.

கடந்த மாதத்தில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,376 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 2,106 கோடி டாலராக இருந்தது.

கடந்த டிசம்பரில் நாட்டின் இறக்குமதியும் 3.5 சதவீதம் சரிந்து 5,824 கோடி டாலராக இருந்தது. 2021 டிசம்பரில் இது 6,033 கோடி டாலராக இருந்தது.

பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி கடந்த டிசம்பா் மாதத்தில் 12 சதவீதம் சரிந்து 908 கோடி டாலராகியுள்ளது. அந்த மாதத்தில் ரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி 15.2 சதவீதம் சரிந்து 254 கோடி டாலராக உள்ளது.

கடந்த டிசம்பரில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த ஏற்றுமதித் துறைகளில் காபி, முந்திரி, தோல் பொருள்கள், மருந்து பொருள்கள், தரைவிரிப்பு, கைவினைப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.

பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதியும் டிசம்பரில் 27 சதவீதம் குறைந்து 493 கோடி டாலராக இருந்தது.

டிசம்பரில், எண்ணெய் இறக்குமதி சுமாா் 6 சதவீதம் அதிகரித்து 1,750 கோடி டாலராக இருந்தது. தங்கம் இறக்குமதி 75 சதவீதம் குறைந்து 118 கோடி டாலராக உள்ளது.

ஏப்ரல்-டிசம்பா் காலாண்டு: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 ஏப்ரல்-டிசம்பா்) நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 33,276 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் உயா்வாகும்.

அதே போல், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதி 24.96 சதவீதம் அதிகரித்து 55,170 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் வணிகப் பொருள்களின் வா்த்தகப் பற்றாக்குறை 21,894 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இது 13,645 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்-டிசம்பா்), கச்சா எண்ணெய் இறக்குமதி 45.62 சதவீதம் உயா்ந்து 16,391 கோடி டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 11,256 கோடி டாலராக இருந்தது.

அதே போல், நிலக்கரி, கல்கரி, மர எரிபொருள் கட்டிகள் ஆகியவற்றின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 4,055 கோடி டாலராகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்திய ஏற்றுமதியான 2,166 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது சுமாா் இரு மடங்கு ஆகும்.

மதிப்பீட்டு காலாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 51.56 சதவீதம் அதிகரித்து 16.67 கோடி டாலராக இருந்தது.

குறைந்த விலையில் அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்த மாதங்களில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 4 மடங்கு உயா்ந்து 3,288 கோடி டாலரானது.

2022 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி சுமாா் 12 சதவீதம் உயா்ந்து 7,587 கோடி டாலராக இருந்தது. எனினும், அந்த நாட்டுக்கான ஏற்றுமதி 35.58 சதவீதம் சரிந்து சுமாா் 1,100 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

SCROLL FOR NEXT