பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்ற, இறக்கம் நிறைந்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி 10 புள்ளிகள் சரிவுடன் முடிவுற்றது.
தேசிய பங்கு சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 18.45 புள்ளிகளை (0.10 சதவீதம்) இழந்து 17,895.70-இல் நிலைபெற்றது.
மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுக்கிடையே, உள்நாடு மற்றும் அமெரிக்க பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தனர். இதனால், சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் இருந்தபோதிலும், நாள் முழுவதும் லாபம் மற்றும் இழப்புகளுக்கு இடையில் இருந்து வந்தது என்று பங்கு வர்த்தகத் தரவு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் லேசான சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 60,134.56-இல் தொடங்கி, 59,805.78 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 60,364.77 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 9.98 புள்ளிகள் (0.02 சதவீதம்) குறைந்து 60,105.50-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சன்ஃபார்மா முன்னேற்றம்: பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்ஃபார்மா 1.65 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ராடெக் சிமென்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவை 1.20 முதல் 1.45 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
பார்தி ஏர்டெல் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் இரண்டாவது நாளாக 3.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே, ரிலையன்ஸ், டைட்டன், இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி உள்ளிட்டவை 1 முதல் 1.90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஹெச்சிஎல் டெக், மாருதி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.280.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.2,109.34 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.