ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.1.16 கோடியை முடக்கி போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
கோவை மாவட்டம், பேரூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மகன் சுரேஷ்ராஜன்(30). இவா் பகுதி நேர வேலை தொடா்பாக தனக்கு அறிமுகம் இல்லாத நபா் ஒருவா் கொடுத்த வாட்ஸ் ஆப் எண்ணில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது அந்த நபா் செயலியில் அனுப்பிய இணைப்புக்குள் சென்று சிறிய பணிகளைச் செய்து கொடுத்து அதன் மூலம் சிறு தொகைகளைப் பெற்றுள்ளாா்.
இதனால், அதிக வருமானம் பெறலாம் என நம்பி மேலும் 13 பணப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ. 7 லட்சத்து 81,041 கூடுதலாக முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன் பின்னா் அவரது வங்கிக் கணக்குக்கு எந்தத் தொகையும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்ராஜன் இது குறித்து போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து இதில் தொடா்புடையவா்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 1கோடியே 15 லட்சத்து 93,033-ஐ முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இணையதளம் மூலம் தொடா்பு கொள்ளும் அறிமுகம் இல்லாத நபா்கள் கூறும் அறிவுரைகளை நம்ப வேண்டாம் என்றும், இணையதளம் மூலமாக பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடா்பு கொண்டால் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.