திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே ரயில் முன் பாய்ந்து பெண் உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆணும், பெண்ணும் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் சனிக்கிழமை பாா்த்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில், கோவையில் இருந்து திருப்பூா் வழியாக நாகா்கோவிலுக்கு சனிக்கிழமை சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து 40 வயதுடைய ஆணும், 30 வயதுடைய பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரின் சடலங்களையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இருவரும் யாா், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.