வர்த்தகம்

2-ஆவது நாளாக உலோக நிறுவன பங்குகள் விற்பனை: மேலும் 221 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 221 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 43.10 புள்ளிகள் (0.24 சதவீதம்) குறைந்து 17,721.50-இல்
 நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், மத்திய வங்கி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும் வர்த்தகர்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினர். குறிப்பாக, நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள், உலோக நிறுவனப் பங்குகள், ஆட்டோ நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. வர்த்தகத்தின் முற்பகுதியில் அதிக நஷ்டத்தை சந்தித்தித்திருந்தாலும், பிற்பகுதியில் ஓரளவு மீட்சி பெற்றதால் பெரிய அளவிலான சரிவு தவிர்க்கப்பட்டுள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.50 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.266.05 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ.1,218.14 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் மேலும் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 4.42 புள்ளிகள் கூடுதலுடன் 60,511.32-இல் தொடங்கி 60,655.14 வரை மேலே சென்றது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், 60,063.49 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 220.86 புள்ளிகள் (0.37 சதவீதம்) குறைந்து 60,286.04-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 591.65 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
 கோட்டக் வங்கி முன்னேற்றம்: பிரபல தனியார் வங்கிகளான கோட்டக் வங்கி 1.59 மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி 1.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயின்ட் ஆகியவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
 டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல் இரண்டாவது நாளாக 5.23 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 மூன்றாவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபமும், வருவாயும் குறைந்ததால், அதன் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து மற்ற முன்னணி உலோக நிறுவனப் பங்குகளும் அடி வாங்கின. இதற்கு அடுத்ததாக ஐடிசி 2.65 சதவீதம் குறைந்தது. சன்ஃபார்மா , மாருதி, ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை குறைந்தன.
 மேலும், அல்ட்ராடெக் சிமெண்ட், எம் அண்ட் எம்,
 இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 அதானி என்டர்பிரைசஸ் உயர்வு!
 அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அக்குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு செவ்வாய்க்கிழமை 14.63 சதவீதம் உயர்ந்து நிலைபெற்றது. ஒரு கட்டடத்தில் அதிகபட்ச உறைநிலையை எட்டியது. இதேபோல அதானி போர்ட்ஸ் 1.33 சதவீதம் உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

SCROLL FOR NEXT