வர்த்தகம்

மத்திய பட்ஜெட் தாக்கல் தினத்தில் சென்செக்ஸ் முன்னேற்றம்; நிஃப்டி சரிவு

தினமணி

மத்திய பட்ஜெட் தாக்கல் தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. சந்தை திசை தெரியாமல் தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 45.85 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 17,616.30-இல் நிலைபெற்றது.
 2023 மத்திய பட்ஜெட் தாக்கல் தினத்தையொட்டி தொடக்கத்தில் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். காலையில் ஏற்றம் பெற்ற சந்தை, பின்னர் லாபப் பதிவால் தள்ளாட்டம் கண்டது. நுகர்வு மற்றும் "கேபெக்ஸ்' ஆகியவற்றில் வலுவான முக்கியத்துவம் கொண்ட நன்கு வடிவமைக்கப்பட்ட பட்ஜெட், சந்தையில் நம்பிக்கையை உயர்த்தியது. இருப்பினும், அதானி பிரச்னை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவு ஆகியவற்றின் மீது முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியதால் , பிற்பகுதியில் சரிவுக்குள்ளானது. குறிப்பாக புதிய வரி விதிப்புக்கு தள்ளப்பட்டதால், ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகள் அதிக விற்பனையை எதிர்கொண்டன. மேலும், மெட்டல், மீடியா, பிஎஸ்யு பேங்க் பங்குகள் பலத்த அடி வாங்கின என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் 158 உயர்வு: சென்செக்ஸ் காலையில் 451.27 புள்ளிகள் கூடுதலுடன் 60,001.17-இல் தொடங்கி அதிகபட்சமாக 60,773.44 வரை மேலே சென்றது. பின்னர், 58,816.84 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 158.18 புள்ளிகள் (0.27 சதவீதம்) கூடுதலுடன் 59,708.08-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 1,223.54 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
 ஐடிசி முன்னேற்றம்: பிரபல நுகர்பொருள் மற்றும் சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 2.61 சதவீதம், டாடா ஸ்டீல் 2.01 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, இன்போஸிஸ், விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்த பட்டியலில் இருந்தன.
 பஜாஜ் ஃபின் சர்வ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபின் சர்வ் 5.65 சதவீதம், பிரபல பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 4.80 சதவீதம், தனியார் வங்கியான இண்டஸ்இண்ட் பேங்க் 3.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, சன்ஃபார்மா, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1.20 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், என்டிபிசி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.3.69 லட்சம் கோடி வீழ்ச்சி
 பட்ஜெட் தாக்கல் தினமான புதன்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.3.69 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.266.54 லட்சம் கோடியாக இருந்தது. ரிலையன்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் விலை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.5,439.64 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT