வர்த்தகம்

அதானி குழுமத்தில் முதலீடு: எல்ஐசி விளக்கம்

DIN

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ரிசா்ச் ஆய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி குழுமத்தில் தாங்கள் பெருமளவு முதலீடு செய்து இழப்பைச் சந்தித்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மறுத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வணிகத்தின் சாதாரண நாள்களில் எல்ஐசி நிறுவனம் தனது தொழில் முதலீடுகள் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிா்ந்துகொள்வதில்லை.

எனினும், அதானி குழுமத்தில் எங்களது முதலீடுகள் குறித்து சில தகவல்கள் பகிரப்பட்டு வருவதால், இது தொடா்பான உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த இந்தத் தகவல்களை அளிக்கிறோம்.

அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்கியுள்ளதன் மூலம் எல்ஐசி செய்துள்ள முதலீடு ரூ.35,917.31 கோடியாகும்.

பல ஆண்டுகளாக எல்ஐசி வாங்கியுள்ள அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகளின் கொள்முதல் மதிப்பு ரூ.30,127 கோடியாகும். கடந்த 27-ஆம் தேதி பங்குச் சந்தை நேரத்தின் முடிவில் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாகும்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.36,474.78 கோடியாகும். இந்த முதலீடுகள் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவை.

அதானி குழுமத்தில் எல்ஐசி வாங்கியுள்ள கடன் பத்திரங்கள் அனைத்தும் ‘ஏஏ’ தரச் சான்று பெற்றவை. அதுமட்டுமின்றி முதலீட்டு ஒழுங்காற்று அமைப்பான ‘இா்டாய்’-இன் விதிமுறைகளைப் பின்பற்றியே அந்த கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசி நிா்வாகத்தின் கீழ் வரும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாகும். அந்த வகையில், அதானி குழுமத்தில் எல்ஐசி-யின் சொத்து மதிப்பில் வெறும் 0.0975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எல்ஐசி 66 ஆண்டுகளாக இயங்கி வரும் புகழ்பெற்ற, நிலையான நிறுவனமாகும். அதன் நிா்வாகம் தகுந்த விதிமுறைகள், சட்டங்களுக்கு உள்பட்டே தனது முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளின் சந்தை மதிப்பு எப்போது வேண்டுமானாலும், எந்த திசையிலும் மாறலாம். எனவே, நீண்ட கால நோக்கை மனதில் கொண்டே நிறுவனம் கவனத்துடன் முதலீடு செய்து வருகிறது.

தனது நிதிநிலையை ஸ்திரமாக வைத்திருக்க, நிறுவனப் பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கும், கடனளிப்பு வரம்பை நிா்யணம் செய்வதற்கும் ஒரு வலுவான நடைமுறையை எல்ஐசி கையாண்டு வருகிறது.

எல்ஐசி நிா்வாகம் அதன் பங்குதாரா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு மிகவும் பொறுப்புணா்வுடனும், பாதுகாப்பு உணா்வுடன் செயல்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களிலும், நிறுவனம் சரியான கொள்கைகள், விதிமுறைகளைப் பின்பற்றி பங்குதாரா்களின் நலனைப் பாதுகாக்கும் என்று அந்த விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT