வர்த்தகம்

மாா்ச் மாதத்தில் சரிந்த ஆபரண ஏற்றுமதி

26th Apr 2023 01:21 AM

ADVERTISEMENT

கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 23.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இருந்தாலும், அந்த மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் அது மிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21.501.96 கோடியாக இருந்தது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இது ரூ.28,198.36 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 23.7 சதவீதம் சரிந்துள்ளது.

ADVERTISEMENT

2022 ஏப்ரல் முதல் கடந்த மாா்ச் மாதம் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நாட்டின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2.48 சதவீதம் அதிகரித்து ரூ.3,00,462.52 கோடியாக உள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டில் இது ரூ.2,93,193.19 கோடியாக இருந்தது.

அமெரிக்காவில் அதிகரித்த பணவீக்கம், உக்ரைன் போா், கரோனா பரவலைத் தடுப்பதற்காக சீனாவில் சுமாா் 6 மாதங்களாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் போன்ற பல்வேறு சவால்களை இந்திய நவரத்தின, ஆபரணத் துறை கடந்த நிதியாண்டில் சந்தித்தது.

அத்தனை சவால்களையும் சமாளித்து அந்தத் துறை இந்த மிதமான ஏற்றுமதி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று ஜிஜேஇபிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT