வர்த்தகம்

"காளை'யின் முயற்சி வீண்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் 1% சரிவு

தினமணி

பங்குச் சந்தை புதன்கிழமையும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் சரிவுடன் தொடங்கிய சந்தையில், ஒரு கட்டத்தில் ஆதிக்கம் கொள்ள முற்பட்ட காளையின் முயற்சி வீணானது. "கரடி'யின் ஆதிக்கம் தொடர்ந்ததால், 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 148.80 புள்ளிகளை (0.87 சதவீதம்) இழந்து 16,858.60-இல் முடிவடைந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சிறிது நேரம் "காளை' ஆதிக்கம் கொண்டாலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் எதிர்மறையாக இருந்ததால், "கரடி' முழுமையாக ஆதிக்கம் கொண்டது. இதனால், சந்தை 6-ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது. ஐடி, பார்மா, ஹெல்த்கேர் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. அதே சமயம், வங்கி, நிதிநிறுவனங்கள் உள்பட மற்ற துறை பங்குகள் கடும் விற்பனையை எதிர்கொண்டன.
 சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவு: காலையில் 397.39 புள்ளிகள் குறைந்து 56,710.13-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,213.33 வரை சென்றது. பின்னர், 56,485.67 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 509.24 புள்ளிகளை (0.89 சதவீதம்) இழந்து 56,598.28-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன.
 ஏசியன் பெயின்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஏசியன் பெயின்ட் 2.90 சதவீதம், சன்பார்மா 2.37 சதவீதம், டாக்டர் ரெட்டி 2.03 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவர் கிரிட், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனி லீவர்,டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 ஐடிசி கடும் சரிவு: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 2.97 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 2.84 சதவீதம், ரிலையன்ஸ் 2.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்டவை 1.70 முதல் 2.40 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாருதி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.268.43 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய் அன்று ரூ.2,823.96 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது பங்குச் சந்தை தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT