வர்த்தகம்

மூலதன சந்தை: 3 மாத சரிவுக்குப் பிறகுபங்கேற்பு ஆவண முதலீடு முன்னேற்றம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய மூலதன சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு தொடா்ந்து 3 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது ஏற்றத்தைக் கண்டுள்ளது.

இது குறித்து செபி புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: பதிவு செய்யாமல் இந்தியப் பங்குச் சந்தை வா்த்தகத்தில் பங்கேற்க விரும்பும் அந்நிய முதலீட்டாளா்கள், அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக நாட்டில் முதலீடு செய்கின்றனா்.

இந்த வகை முதலீடு கடந்த மே மாதத்திலிருந்து தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், ஆகஸ்டில் முன்னேற்றத்தைக் கண்டது. அதன்படி, இந்திய சந்தையில் (பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவை) ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் ரூ.84,810 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது ஜூலை இறுதி நிலவரப்படி ரூ.75,725 கோடியாக இருந்தது.

இந்திய மூலதன சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமான மொத்த முதலீடு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ.90,580 கோடியாக இருந்த நிலையில், மே மாத முடிவில் ரூ.86,706 கோடியாக குறைந்தது. இந்த முதலீடு ஜூன் மாதத்தில் ரூ.80,092 கோடியாக கீழிறங்கியது.

ADVERTISEMENT

ஆக்ஸ்ட் மாத இறுதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் பங்குகளில் ரூ.75,389 கோடியும், கடன் சந்தையில் ரூ.9,330 கோடி, நிதிப் பத்திரங்களில் ரூ.91 கோடியும் முதலீடு செய்யப்பட்டது.

முந்தைய ஜூலை மாதத்தில், பங்குகளில் ரூ.66,050 கோடியும் கடன் சந்தையில் ரூ.9,592 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருந்தது என செபி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT