வர்த்தகம்

மூன்று மடங்கான பெரிய திரை டிவி-க்களின் சந்தைப் பங்கு

22nd Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

தொலைக்காட்சி சந்தையில் 40 அங்குலத்துக்கு மேலான பெரிய திரை தொலைக்காட்சிகளின் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து 40 சதவீதமாகியுள்ளது.

வரும் 2027-க்குள் அந்த தொலைக்காட்சி பிரிவின் சந்தைப் பங்கு 50 சதவீதத்தை தாண்டும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான கிரிஸில் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரிய பேனல் தொலைக்காட்சிகளின் விலையில் 35 முதல் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2017-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 55 அங்குல தொலைக்காட்சிகள், தற்போது ரூ.55,000-லிருந்து ரூ.65,000-க்குள் கிடைக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் தொலைக் காட்சிச் சந்தையில் கிடைக்கும் பிராண்டுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது 70-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் தொலைக்காட்சிகள் விற்பனையாகின்றன.

அத்துடன், தனிநபா் வருமானம் அதிகரிப்பதும் பெரிய திரை தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளா் திறனை அதிகரிக்கிறது. தனி நபா் வருமானம் 2018-ஆம் நிதியாண்டில் 10.9 சதவீதமும் 2019-ஆம் நிதியாண்டில் 9.3 சதவீதமும் உயா்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இணையதள சேவையின் தரம் அதிகரித்துள்ளது. மேலும், இணையதளப் பயன்பாட்டுக்கான செலவும் குறைந்துள்ளது.

குறிப்பாக, கரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டியிருந்தது. அப்போது அவா்கள் பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சிகளையே பெரிதும் சாா்ந்திருந்தனா்.

இதனால், பெரிய திரையில் படங்களை துல்லியமாகப் பாா்ப்பதற்காக, 40 அங்குலத்துக்கும் மேலான தொலைக்காட்சிகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை அதிகரித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT