வர்த்தகம்

3-ஆவது நாளாக "காளை' வெற்றி நடை: சென்செக்ஸ் 550 புள்ளிகள் முன்னேற்றம்

19th Oct 2022 02:57 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி மேலும் 175.15 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயர்ந்து 17,486.95-இல் முடிவடைந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. மேலும், பணவீக்கத்தை குறைப்பது குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மத்தியில், சந்தை மூன்றாவது நாளாக தொடர்ந்து உயர்ந்தது. குறிப்பாக பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பெரு நிறுவன கடன் சுழற்சி மற்றும் பண்டிகைக் காலத்தில் சில்லரைக் கடன் வழங்கல் அதிகரிப்பு உள்ளிட்டவை சாதகமாக அமைந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 550 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 333.15 புள்ளிகள் கூடுதலுடன் 58,744.13-இல் தொடங்கி, அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 59,143.66 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 549.62 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயர்ந்து 58,960.60-இல் முடிவடைந்தது.
 25 பங்குகள் விலை உயர்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, டெக் மஹிந்திரா, சன்பார்மா, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய 5 பங்குகள் மட்டும் 0.72 முதல் 0.15 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சி பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் எஸ்பிஐ இரண்டாவது நாளாக 3.41 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஐடிசி, நெஸ்லே, பார்தி ஏர்டெல், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.40 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 1 முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.73 லட்சம் கோடிஉயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.274.48 லட்சம் கோடியாக இருந்தது.
 இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.372.03 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT