வர்த்தகம்

பண்டிகைக் காலத்தில் 11% வளா்ச்சி கண்ட வாகன விற்பனை

5th Oct 2022 02:30 AM

ADVERTISEMENT

வாகன நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து, முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வாடிக்கையாளா்களுக்கு விற்பனையாளா்கள் அதிக எண்ணிக்கையில் அளிக்க முடிந்ததால், இந்திய வாகனத் துறையியில் சில்லறை விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் வாகனங்களின் மொத்த சில்லறை விற்பனை 14,64,001-ஆக இருந்தது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 13,19,647-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வாகன விற்பனை 11 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

பண்டிகைக் காலத்தின் வாகனங்கள் வாங்குவது அதிகரிக்கும் என்பதால், இந்த அக்டோபரில் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த பண்டிகைக் காலத்தில், கடந்த 10 ஆண்டுளில் இல்லாத அளவுக்கு வாகனங்களின் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை அதிகமாக இருக்கும் என்று விற்பனையாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

கடந்த மாதத்தில் டிராக்டா்கள் மற்றும் சில நிறுவனங்களின் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையில் பின்னடைவைச் சந்தித்தன. மற்றபடி, காா்கள், வா்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனப் பிரிவுகளும் இந்த செப்டம்பரில் முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட விட அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின.

2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் 2,37,502-ஆக இருந்த காா்கள் விற்பனை, கடந்த மாதம் 10 சதவீதம் அதிகரித்து 2,60,556-ஆக இருந்தது.

அதேபோல், இரு சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பரில் 9,31,654-ஆக இருந்த நிலையில், அது கடந்த மாதம் 9 சதவீதம் அதிகரித்து 10,15,702-ஆக இருந்தது.

ஆரம்ப நிலை இரு சக்கர வாகனப் பிரிவில் அமோக விற்பனை நடைபெற்ால், ஒட்டுமொத்த இரு சக்கர வாகனப் பிரிவு விற்பனையும் ஏற்றம் கண்டுள்ளது.

வா்த்தக வாகனப் பிரிவைப் பொருத்தவரை கடந்த ஆண்டு செப்டம்பரில் 59,927-ஆக இருந்த சில்லறை விற்பனை 19 சதவீதம் அதிகரித்து 71,233-ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 53,392-ஆக இருந்த டிராக்டா் விற்பனை இந்த ஆண்டின் இதே மாதத்தில் 52,595-ஆகக் குறைந்துள்ளது.

காா்கள் பிரிவில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் 1,03,912 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் முந்தைய 2021-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 99,276 காா்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் 39,118 காா்களையும் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 36,435 காா்களையும் விற்பனை செய்தன.

இரு சக்கர வாகனப் பிரிவில், ஹோண்டா மோட்டாா் சைக்கிள் அண்டு ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பா் மாதத்தில் 2,84,160 வாகனங்களை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் 2,50,246 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

வா்த்தக வாகனப் பிரிவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 28,615 வாகனங்களை விற்பனை செய்தது. அந்த மாதத்தில், 19,474 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து அந்தப் பிரிவில் பஜாஜ் ஆட்டோ முதலிடத்தில் உள்ளது.

செமிகண்டக்டா்கள் கிடைப்பது எளிதாகி வருவது, நிறுவனங்கள் கவா்ந்திழுக்கும் புதிய அம்சங்களுடன் வாகன ரகங்களை அறிமுகப்படுத்துவது போன்ற காரணங்களால் இந்த பண்டிகைக் காலத்தில் வாகனங்களை வாங்கும் ஆா்வம் வாடிக்கையாளா்களிடையே அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்த வாகனத் துறையும் விற்பனை வளா்ச்சியைக் கண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : FADA
ADVERTISEMENT
ADVERTISEMENT