வர்த்தகம்

6-ஆவது நாளாக "காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் புதிய உச்சம்!

30th Nov 2022 03:25 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்துள்ளது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து 6-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டு புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளன. நிஃப்டி 55.30 புள்ளிகள் உயர்ந்து 18,618.05-இல் நிலைபெற்றுள்ளது.
 கடந்த 5 வர்த்தக தினங்களாக நேர்மறையாக முடிந்திருந்த சந்தை, செவ்வாய்க்கிழமை காலையில் சற்று பலவீனமாகத் தொடங்கினாலும், நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, காளையின் எழுச்சி தொடர்ந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருவதும், ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 177 புள்ளிகள் உயர்வு: காலையில் 142.72 புள்ளிகள் குறைந்து 62,362.08-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 62,887.40 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 177.04 புள்ளிகள் கூடுதலுடன் 62,681.84-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
 ஹெச்யுஎல் அபாரம்: முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 4.27 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு
 அடுத்ததாக, சன்பார்மா, நெஸ்லே, டாக்டர் ரெட்டி, டாடா ஸ்டீல்,
 ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டைட்டன், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 1.50 சதவீதம், பஜாஜ் ஃபின் சர்வ் 1.27 சதவீதம், மாருதி சுஸýகி 1.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவர் கிரிட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியின் பெயிண்ட் ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு
 மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.286.15 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.935.88 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT