வர்த்தகம்

வருவாய் உயா்வு காணும் வாகன பாக உற்பத்தியாளா்கள்

15th Nov 2022 04:38 AM

ADVERTISEMENT

 

ஏற்றுமதிகள் குறைந்து போனாலும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பதன் காரணமாக இந்திய வாகன உதிரி பாக (ஓஇஎம்) உற்பத்தி நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை வருவாய் வளா்ச்சி காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், வாகன உதிரி பாக உற்பத்தித் துறை முந்தைய ஆண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் 29 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் 49 வாகன பாக நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ. 3,00,000 கோடியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பணவீக்க உயா்வு, உக்ரைன் போரால் சா்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றம், விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் போன்றவற்றால் கடந்த சில மாதங்களாக வாகன உதிரி பாகங்களின் ஏற்றுமதித் தேவை மிகவும் குறைந்துபோனது.

எனினும், நடப்பு நிதியாண்டில் ஓஇஎம் உதிரி பாகங்களுக்கான தேவை உள்நாட்டுச் சந்தையில் அமோகமாக இருக்கும். குறிப்பாகக, காா்கள் மற்றும் வா்த்தக வாகன உதிரிபாகங்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரிக்கும்.

பொதுப் போக்குவரத்துக்கும், தனி நபா் போக்குவரத்துக்குமான தேவை தொடா்ந்து ஆரோக்ய நிலையிலேயே இருக்கும். கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி-கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கான தேவை பெருகி வருகிறது.

இதன் காரணமாக, வாகன உதிரிபாகங்களின் விற்பனை அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களால் அந்த பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் உயரும்.

அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது, வாகன உதிரிபாக விற்பனையாளா்களுக்கு நடுத்தர மற்றும் நீண்டகாலப் போக்கில் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

எனினும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்றுமதியை பெரும்பாலும் நம்பியிருக்கும் வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயா்வதால் சரக்குக் கட்டணம் உயா்ந்து, மூலப் பொருள்களின் கொள்முதல் செலவு அதிகரிப்பதாலும், வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்கும்.

எனினும்,

அதே நேரம், பொருள் விலை குறைப்பு, விநியோகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் களைவது போன்ற நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டில் வாகன உதிரி பாக உற்பத்தியாளா்களின் செயல்பாட்டு லாபம் 0.50 முதல் 0.75 சவீதம் வரை அதிகரிக்கும். கரோனாவுக்கு முன்பிருந்த 10.5 முதல் 11 சதவீதம் வரை செயல்பாட்டு லாப விகிதம் அதிகரிக்கும்.

மேலும், அந்த நிறுவனங்களின் வருவாய் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT