வர்த்தகம்

ஐடி, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனை: சென்செக்ஸ் மேலும் 303 புள்ளிகள் வீழ்ச்சி!

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை காலையில் ஏற்றத்துடன் தொடங்கி, இறுதியில் சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 303 புள்ளிகளை இழந்தது. ஐடி, மெட்டல், ரதியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்க் கொண்டதால், சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் முடிந்திருந்தது. ஆனால், ஐரோப்பா, ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவற்றில் வா்த்தகம் நோ்மறையாக நடந்து வந்தது. இந்த நிலையில், உள்நாட்டு சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கியது. பிற்பகல் வா்த்தகத்தில் காலையில் பெற்ற லாபத்தை இழந்து சரிவில் முடிந்தது. மத்திய வங்கிக் கொள்கை கடுமையாக்கப்படுவதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முதலீட்டாளா்கள் மதிப்பிட்டுள்ளனா். மேலும், உலகளாவிய சந்தைகள் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் முடிவு அறிவிப்புக்காக காத்திருக்கின்றன. இதனால், கடந்த சில நாள்களாக சந்தை ஏற்றம் பெறும் போதெல்லாம் பங்குகளை விற்கத் தொடங்குகின்றனா் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,611 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,444 நிறுவனப் பங்குகளில் 717 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,611 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 67 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 155 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.85 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.248.127லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,393.45 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

மூன்றாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 201.46 புள்ளிகள் கூடுதலுடன் 54,254.07-இல் தொடங்கி அதிகபட்சமாக 54,379.59 வரை உயா்ந்தது. பின்னா், 53,683.16 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 303.35 புள்ளிகள் (0.56 சதவீதம்) குறைந்து 53,749.26-இல் நிலைபெற்றது. முதல் பாதியில் காளையின் ஆதிக்கத்தில் இருந்த சந்தை, இரண்டாவது பாதியில் கரடியின் பிடியில் வந்தது. சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

சென்செக்ஸில் 18 பங்குகள் விலை சரிவு : சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 180 பங்குகள்வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் முன்னணி பிரபல பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 8.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம் உள்ளிட்டவை 2 முதல் 3.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. ஹெச்சிஎல் டெக், எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், மாருதி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

என்டிபிசி முன்னேற்றம்: அதே சமயம், பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 3.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ்,் பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், சன்பாா்மா உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 99 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில்275 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,686 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 32 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலு் இருந்தன. காலையில் 71.20 புள்ளிகள் கூடுதலுடன் 16,196.35-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 16,223.35 வரை மேலே சென்றது. பின்னா், 16,006.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 99.35 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 16,025.80-இல் நிலைபெற்றது.

ஐடி, மெட்டல் குறியீடுகள் கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 3.84 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மீடியா, ரியால்ட்டி, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள்2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், பாா்மா, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.

எல்ஐசி பங்குகள் சரிவு!

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நோ்மறையாக முடிந்தது. ஆனால், புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.

தேசிய பங்குச் சந்தையில் காலை வா்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் ரூ.831.50-இல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.841.45 வரை உயா்ந்தது. பின்னா், ரூ.814.25 வரை கீழே சென்றது. இறுதியில் 0.99 சதவீதம் குறைந்து ரூ.814.95-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT