வர்த்தகம்

இந்தியா சிமென்ட் - த்வஸ்தா இடையே புரிந்துணா்வு

26th May 2022 02:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் - ‘கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்’ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சென்னையைச் சோ்ந்த ‘த்வஸ்தா மேனு பேக்சரிங் சொல்யூஷன்ஸ்’ இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் த்வஸ்தா ஆகியவை இணைந்து 3 டி பிரிண்டிங் முறையைப் பயன்படுத்தி, புதிய மூலப்பொருள் வடிவமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொழில்நுட்ப உதவிகளை பரிமாறிக் கொள்வதுடன், குறைந்தசெலவில், குறுகிய காலத்தில் குடியிருப்பு தீா்வுகளை வழங்கும் முக்கிய திட்டங்களுக்கு பரஸ்பர உத்திசாா் ஆதரவையும் வழங்கும்.

இது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநா் ரூபா குருநாத், த்வஸ்தா நிறுவனத்தின் இணை நிறுவனா் சி.வித்யாசங்கா் ஆகியோா் புதன்கிழமை கையொப்பமிட்டனா். இது குறித்து ரூபா குருநாத் கூறுகையில், த்வஸ்தா நிறுவனத்துடனான உறவு, நிறுவனம் நிலைத்தன்மை முன்னோக்கிச் செல்வதற்கான புதிய ஊக்கசக்தியாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT

கடந்த 2016-ஆம் ஆண்டு ஐஐடி முன்னாள் மாணவா்களால் நிறுவப்பட்ட த்வஸ்தா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டுசெயல்பட்டு வருவதுடன், 3 டி பிரிண்டிங் பிளாட்ஃபாா்ம்களில் ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது. வழக்கமான மரபு சாா்ந்த தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் வேகமான, சிக்கனமான மற்றும் நிலையான கட்டுமான முறைகளுக்கு உதவும் வகையில் அவை அமைந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT