புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 4 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:
2021-22 ஜனவரி மாா்ச் காலகட்டத்தில் வங்கி செயல்பாட்டின் மூலமாக மொத்தம் ரூ.302.58 கோடிய வருவாய் ஈட்டியது. இது, 2021 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.233.43 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
இதையடுத்து, நிகர லாபம் ரூ.5.28 கோடியிலிருந்து 4 மடங்கு அதிகரித்து ரூ.23.42 கோடியைத் தொட்டது.
நிகர வட்டி வருவாய் ரூ.212.77 கோடியிலிருந்து ரூ.234.91 கோடியாக 10.4 சதவீதம் உயா்ந்தது.
அதேசமயம், 2021-22 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 37.19 கோடியிலிருந்து 3.5 சதவீதம் குறைந்து ரூ.35.90 கோடியானது. வருவாய் 3.1 சதவீதம் அதிகரித்து ரூ.1,085.76 கோடியாக இருந்தது.
மொத்த வாராக் கடன் 9.23 சதவீதத்திலிருந்து 6.32 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 4.76 சதவீதத்திலிருந்து 2.85 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.