வர்த்தகம்

தள்ளாட்டத்துக்கிடையே முன்னேறிய சென்செக்ஸ், நிஃப்டி

29th Jun 2022 03:42 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகம் முடியும் தறுவாயில் பங்குகளை வாங்க வரவேற்பு பெருகியதையடுத்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்ந்து, நான்காவது நாளாக தொடர் ஏற்றத்தை உறுதி செய்தது.
 அமெரிக்க சந்தைகள் திங்கள்கிழமை சரிவில் முடிந்திருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலை வர்த்தகத்தில் எதிரொலித்தது. பின்னர், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் பெற்றது, உள்நாட்டுச் சந்தை வர்த்தகம் முடியும் தறுவாயில் முன்னேற்றம் காண பெரிதும் உதவியது.
 குறிப்பாக, ஐடி, ஆட்டோ, எரிசக்தி துறை பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை 4-ஆவது நாளாக நேர்மறையாக முடிந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 ரூ.245.24 லட்சம் கோடி சந்தை மூலதனம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,415 நிறுவனப் பங்குகளில் 1,488 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 1,791 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 67 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 43 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.245.24 லட்சம் கோடியாக இருந்தது.
 சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்வு: காலையில் 315.02 புள்ளிகள் குறைந்து 52,846.26-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,771.53 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 53,301.40 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 16.17 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 53,177.45-இல் நிலைபெற்றது.
 எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. ஏனைய 17 நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. இதில் வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.78 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 இதற்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. ஐடிசி, எஸ்பிஐ, மாருதி சுஸýகி, விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 டைட்டன் கடும் சரிவு: அதே சமயம், பிரபல கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி நிறுவனமான டைட்டன் 3.54 சதவீதம், ஏஷியன் பெயிண்ட் 3.25 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 நிஃப்டி 18 புள்ளிகள் ஏற்றம்:
 தேசிய பங்குச் சந்தையில் 901 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 1,032 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 32 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலில் வந்தன. காலையில் சுமார் 74.60 புள்ளிகள் குறைந்து 15,757.45-இல் தொடங்கிய நிஃப்டி, 15,710.15 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 15,892.10 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 18 புள்ளிகள் (0.11 சதவீதம்) கூடுதலுடன் 15,850.20-இல் நிலைபெற்றது.


 

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT