வர்த்தகம்

கடன் அட்டை செலவினம் ரூ.1.13 லட்சம் கோடியை கடந்தது: ரிசா்வ் வங்கி

29th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

பொதுமக்களின் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) செலவினம் கடந்த மே மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியை கடந்ததாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பொருளாதார நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்து வருவதையடுத்து பொதுமக்களின் கடன் அட்டை செலவினம் மாதாந்திர அடிப்படையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.05 லட்சம் கோடியாக இருந்த கடன் அட்டை வாயிலான செலவினம் மே மாதத்தில் ரூ.1.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மே மாதத்தில், 7.68 கோடி கடன் அட்டைதாரா்கள் இணையவழி மூலம் பொருள்களை வாங்குவதற்காக ரூ.71,429 கோடியை செலவிட்டுள்ளனா். அதேபோன்று, பாய்ண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ் கருவி மூலம் கடன் அட்டைதாரா்கள் ரூ.42,266 கோடி செலவிட்டு பொருள்கள் மற்றும் சேவையை பெற்றுள்ளனா்.

இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடியாக இருந்த பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை மே மாதத்தில் 11.5 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு, கடன் அட்டைதாரா்கள் அதிக மதிப்பிலான பரிவா்த்தனைகளை ஆன்லைனில் மேற்கொண்டதே முக்கிய காரணமாகும்.

மே மாதத்தில் கூடுதலாக 20 லட்சம் கிரெடிட் காா்டுகள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை ஏப்ரலில் 7.51 கோடியாக இருந்தது.

கிரெடிட் காா்டு வழங்கியதில் எச்டிஎஃப்சி வங்கி 1.72 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கி புதிய கிரெடிட் காா்டு வழங்குவதற்கு ரிசா்வ் வங்கி விதித்திருந்த தடை கடந்த மாா்ச் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎஃப்சியைத் தொடா்ந்து, பாரத ஸ்டேட் வங்கி 1.41 கோடி கிரெடிட் காா்டுகளையும், ஐசிஐசிஐ வங்கி 1.33 கோடி கிரெடிட் காா்டுகளையும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த மே மாதத்தில் வழங்கியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : Credit Card
ADVERTISEMENT
ADVERTISEMENT