வர்த்தகம்

3-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ், நிஃப்டி முன்னேற முடியாமல் தவிப்பு

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை தள்ளாட்டத்துக்கிடையே எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முன்னேற முடியாமல் மேலும் 153 புள்ளிகளை இழந்தது. இதைத் தொடர்ந்து, சென்செக்ஸ் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவில் குறைந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. ஏற்கெனவே திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைக் கண்டிருந்த சந்தை, செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்தில் இருந்தது. வர்த்தகத்தின் போது பலமுறை மீட்சி பெற்றுவிடுவதற்கான அறிகுறிகள் தோன்றினாலும், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்த வண்ணம் இருந்ததால், மூன்றாவது நாளாக சந்தை
சரிவைச் சந்தித்தது.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் திட்டமிடப்பட்ட முக்கிய அறிவிப்புக்காக உலகளாவிய சந்தைகள் காத்திருக்கின்றன. மேலும், உள்நாட்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
1,874 நிறுவனப் பங்குகள் விலை சரிவு
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,449 நிறுவனப் பங்குகளில் 1,435 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,874 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 50 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 191 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.59 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.244.61 லட்சம் கோடியாக இருந்தது.
ஐடி, பார்மா குறியீடுகள்
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி, பார்மா, ஹெல்த்கேர், மெட்டல் ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீஸஸ், எஃப்எம்சிஜி, மீடியா, பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் சிறிதளவு குறைந்தன.
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தையில் 803 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,105 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி 50 பட்டியலில் 27 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 100.15 புள்ளிகள் குறைந்து 15674.25-இல் தொடங்கிய நிஃப்டி, 15,659.45 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,858.00 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 42.30 புள்ளிகள் (0.27 சதவீதம்) குறைந்து 15,732.10-இல் நிலைபெற்றது.
விற்பனை அழுத்தம்
காலையில் 350.76 புள்ளிகள் குறைந்து 52,495.94-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,459.48 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 53,095.32 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 153.13 புள்ளிகள் (0.29 சதவீதம்) குறைந்து 52,693.57-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் மீட்சி பெற்று விடும் என்று எண்ணிய நிலையில் விற்பனை அழுத்தம் காரணமாக 3-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.
பார்தி ஏர்டெல்
சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 16 பங்குகள்
ஆதாயம் பெற்றன. இதில், பார்தி ஏர்டெல் 1.63 சதவீதம், என்டிபிசி 1.61 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்டவை 1 முதல் 1.40 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி வங்கிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
இன்டஸ்இண்ட் பேங்க்
பிரபல தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 2.38 சதவீதம், டெக் மஹிந்திரா 2.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுஸýகி, ஏஷியன் பெயிண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.35 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
ஏற்றம் கண்ட எல்ஐசி!
தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை செவ்வாய்க்கிழமை 1.13 சதவீதம் உயர்ந்து ரூ.675.80-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.664.10-இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.684 வரை உயர்ந்தது. பின்னர், ரூ.663 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தது. இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தக முடிவில் 0.90 சதவீதம் உயர்ந்து ரூ.674.20-இல் நிலைபெற்றது.
பட்டியலாகிய தினத்தில் இருந்து மூன்றாவது முறையாக எல்ஐசி பங்குகள் நேர்மறையாக முடிந்தது. மற்ற நாள்கள் அனைத்திலும் எதிர்மறையாக முடிந்தது.
ரூபாய் மதிப்பு 78.04
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றம் எதுவுமின்றி வரலாறு காணாத சரிவான 78.04 என்ற அளவிலேயே நிலைத்தது.
கச்சா எண்ணெய் பீப்பாய் 123 டாலர்
சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்து பீப்பாய் 123.15 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
எஃப்ஐஐ ரூ.4,502 கோடிக்கு பங்கு விற்பனை மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) நிகர அடிப்படையில் ரூ.4,502.25 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்றதாக சந்தைப்புள்ளி விவரங்கள் தெரிவித்தன.



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: டிரம்ப்பின் அதிர்ச்சி கருத்து!

நீங்க ரெடியா? இங்கே கேட்பவர் தமன்னா!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

SCROLL FOR NEXT