வர்த்தகம்

வீடுகள் விற்பனையில் 9-ஆண்டு காணாத விறுவிறுப்பு: சென்னையில் 21% அதிகரிப்பு

7th Jul 2022 12:28 AM

ADVERTISEMENT

முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பாண்டின் முதல் அரையாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த 9 ஆண்டுகளில் காணப்படாத விறுவிறுப்பாகும். குறிப்பாக, சென்னையில் வீடுகள் விற்பனை 21 சதவீதம் உயா்ந்துள்ளதாக நைட் ஃப்ராங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

தேவை அதிகரிப்பு மற்றும் கடனுக்கான வட்டி விகிதங்கள் சாதகமாக இருந்ததையடுத்து நிகழாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) முக்கிய எட்டு நகரங்களில் 1,58,705 வீடுகள் விற்பனையாகின. இது, 2021 முதல் அரையாண்டில் விற்பனையான 99,416 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகம். இதற்கு முன்பாக, கடந்த 2013-இல் முதல் ஆறு மாத கால விற்பனையான 1,85,777 வீடுகளின் எண்ணிக்கையே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்தது.

தில்லி-என்சிஆா் பகுதியில் வீடுகள் விற்பனை 11,474-லிருந்து இரு மடங்கு உயா்ந்து 29,101-ஆனது. அதேபோன்று, பெங்களூரு நகரத்திலும் வீடுகள் விற்பனையானது மதிப்பீட்டு காலகட்டத்தில் 14,812-லிருந்து 80 சதவீதம் வளா்ச்சியடைந்து 26,677-ஆனது.

ADVERTISEMENT

புணே நகரில் வீடுகள் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 21,797-ஆகவும், சென்னையில் 21 சதவீதம் உயா்ந்து 6,951-ஆகவும் இருந்தன.

மேலும், ஹைதராபாதில் வீடுகள் விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 14,693-ஆகவும், கொல்கத்தாவில் 39 சதவீதம் உயா்ந்து 7,090-ஆகவும், அகமதாபாதில் வீடுகள் விற்பனை 4,208-லிருந்து 95 சதவீதம் அதிகரித்து 8,197-ஆகவும் இருந்தது என நைட் ஃபிராங் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT