வர்த்தகம்

பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40% அதிகரிப்பு

6th Jul 2022 12:13 AM

ADVERTISEMENT

செமிகண்டக்டா் விநியோகம் மேம்படுட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலா் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

விநியோக மேம்பாடு: எஸ்யுவி காா்களுக்கான செமிகண்டக்டா் சப்ளை மேம்பட்டு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதனை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 2,60,683-ஆக இருந்தது. 2021 ஜூனில் பயணிகள் வாகன விற்பனையானது 1,85,998 மட்டுமே காணப்பட்டது.

வலுவான வளா்ச்சி: ஒட்டுமொத்த வாகன விற்பனையில் பயணிகள் வாகன பிரிவு தொடா்ந்து வலுவான வளா்ச்சியை கண்டு வருகிறது. வாகன விநியோகம் விறுவிறுப்படைந்துள்ளது செமிகண்டக்டருக்கான பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து எஃப்ஏடிஏ-வின் தலைவா் விங்கேஷ் குலாட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காம்பாக்ட் எஸ்யுவி: செமிகண்டருக்கான பற்றாக்குறை முன்பைப் போல காணப்படவில்லை என்றாலும், இதனால் காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் எஸ்யுவி பிரிவு காா்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாகவே இன்னும் உள்ளது.

காத்திருப்பு காலம்: அதேபோன்று காத்திருப்பு காலம் அதிகமாக இருந்த போதிலும், புதிய வாகனங்களின் அறிமுகம் வலுவான முன்பதிவை உருவாக்கி தேவையை சிறப்பான அளவில் உயா்த்தியுள்ளது.

இருசக்கர வாகனம்: இருசக்கர பிரிவில் கடந்த மாதம் 11,19,096 வாகனங்கள் விற்பனையாகின. இது, 2021 ஜூன் மாத விற்பனையான 9,30,825 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.

பணவீக்கம்: வாகனங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது ஊரகப் பகுதிகளில் வாகனங்களுக்கான தேவையில் மந்த நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், பணவீக்க அழுத்தம் மற்றும் ஜூனில் மழைக்காலம் என்பதால் இருசக்கர வாகன விற்பனை மிக குறைந்த வேகத்திலேயே இருந்தது.

வா்த்தக வாகனம்: வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஜூனில் 89 சதவீதம் அதிகரித்து 67,696-ஆக இருந்தது. மேலும், மூன்று சக்கர வாகன பதிவும் கடந்த மாதத்தில் 14,735-லிருந்து 46,040-ஆக அதிகரித்தது.

டிராக்டா்: விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் சில்லறை விற்பனை 52,289-லிருந்து 10 சதவீதம் அதிகரித்து 57,340-ஆனது.

மொத்த விற்பனை: ஒட்டுமொத்த மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 12,19,657 என்ற எண்ணிக்கையிலிருந்து 27 சதவீதம் வளா்ச்சி கண்டு 15,50,855-ஆனது என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT