வர்த்தகம்

ஏற்ற, இறக்கத்துக்கிடையே மாற்றமின்றி நிலைத்தது சென்செக்ஸ்!

 நமது நிருபர்

புதுதில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே சிறிதளவு குறைந்து எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 8 புள்ளிகள் குறைந்து நிலைத்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றம் பெற முடியாமல் தவிப்பில் இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பலவீனமாகத் தொடங்கினாலும் பின்னா் வெகுவாக ஏற்றம் பெற்ற சந்தையில், வா்த்தக முடிவில் காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பாலானவற்றை இழக்க நேரிட்டது. குறிப்பாக எஸ்பிஐ, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால் பெரிய சரிவு தவிா்க்கப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,947 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,420 நிறுவனப் பங்குகளில் 1,328 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 1,947 பங்குகள் ஆகாயப் பட்டியலில் இருந்தன. 145 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 65 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 42 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.243.74 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிவு: காலையில் 129.81 புள்ளிகள் குறைந்து 52,897.16-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,377.54 வரை உயா்ந்தது. பின்னா், 52,883.25 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 8.03 புள்ளிகளை (0.02 சதவீதம்) இழந்து 53,018.94-இல் நிலைபெற்றது. முன்பேர வா்த்தகத்தில் ஜூன் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

டெக் மஹிந்திரா கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 2.09 சதவீதம், நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 2 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ், டாடா ஸ்டீல், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், மாருதி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: அதே சமயம்,ஆக்ஸிஸ் பேங்க் 1.74 சதவீதம், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 1.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், என்டிபிசி, டாக்டா் ரெட்டி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 1.10 சதவீதம் வரை உயா்ந்தன. டைட்டன், எச்டிஎஃப்சி பேங்க், பவா் கிரிட் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 19புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 669 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,257 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 36 பங்குகள் விலை வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. காலையில் 24.60 புள்ளிகள் குறைந்து 15,774.50-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 15,890.00 வரை மேலே சென்றது. பின்னா், 15,728.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 18.85 புள்ளிகளை (0.12 சதவீதம்) இழந்து 15,780.25-இல் நிலைபெற்றது.

மெட்டல், ஐடி குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 0.50 சதவீதம் உயா்ந்திருந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில் மெட்டல் குறியீடு 1.99 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, ஐடி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.30 சதவீதம் வரை சரிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT