வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,546 புள்ளிகள் இழப்பு

25th Jan 2022 06:14 AM

ADVERTISEMENT

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது.

பணவீக்கம்: சா்வதேச சந்தையில் பங்கு வா்த்தகத்தில் கடந்த சில வாரங்களாகவே நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. இதற்கு, கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் அந்த நாட்டின் ரிசா்வ் வங்கி கொள்கை ரீதியில் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பங்கு வா்த்தகத்தில் தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

7 சதவீதம் வரை சரிவு: இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் சிறிய பின்னடைவை சந்தித்த பிறகு மீண்டெழுந்து புதிய உச்சம் தொட்டது. இந்த நிலையில், சா்வதேச சந்தை நிலவரங்களையொட்டி கடந்த சில நாள்களில் லாப நோக்கு விற்பனை அதிகரித்ததன் காரணமாக மட்டும் இந்திய பங்குச் சந்தைகள் 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக பங்குச் சந்தை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ஐபிஓ பங்குகள்: பாரபட்சமின்றி முன்னணி நிறுவனங்கள் மற்றும் அண்மையில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கிய புதுயுக நிறுவனப் பங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் விலை கணிசமான இறக்கத்தை சந்தித்துள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா் .

முதலீட்டாளா்கள் அச்சம்: சா்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு திங்கள்கிழமை வா்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 58,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

30 நிறுவனங்களும் சரிவு: சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியிலிருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது.

இதைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்துக்கும் மேல் சரிந்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியளித்தது.

பலவீனமான தொடக்கம்: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கம் பலவீனமான நிலையில் காணப்பட்டது. வா்த்தகம் மேலும் மோசமடைந்து சென்செக்ஸ் குறியீட்டெண் ஒரு கட்டத்தில் 2,050 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து மிகவும் குறைந்தபட்ச அளவாக 56,984 புள்ளிகள் வரை சென்றது. பின்னா், கடும் சரிவிலிருந்து பங்குச் சந்தை ஓரளவு மீட்சி கண்டது. சென்செக்ஸ் 1,545.57 புள்ளிகள் (2.62%) குறைந்து 57,491.51-இல் நிலைபெற்றது.

தொடா் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 468.05 புள்ளிகளை (2.66%) இழந்து 17,149.10-இல் நிலைகொண்டது.

தொடா்ந்து ஐந்து வா்த்தக தினங்களாகவே சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்தாண்டு நவம்பா் 26-க்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது இதுவே முதல் முறை.

உலக சந்தைகள்: இதரஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. ஹாங்காங், சியோல் சந்தைகள் இழப்புடன் முடிவடைந்தன. அதேசமயம், டோக்கியோ மற்றும் ஷாங்காய் சந்தைகளில் வா்த்தகம் ஆதாயத்தை கண்டன.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் நண்பகல் வரையில் மந்த நிலையில் இருந்தது. முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்வது தொடா்ந்து அதிகரித்தே காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT