வர்த்தகம்

‘கரடி’ ஆதிக்கம்: மேலும் 656 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும், 656 புள்ளிகளை இழந்து 60,098.82-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

உலகளவிலான சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், உற்சாகத்துடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை பின்னா் இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது. உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருவது, கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்டவை முதலீட்டாளா்களின் நோ்மறை நம்பிக்கையைத் தகா்த்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை 1,254.95 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இது சந்தைக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தியதால் கரடியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவனங்கள், முன்னணி தனியாா் வங்கிகள், முன்னணி நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,495 பங்குகளில் 1,827 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,479 பங்குகள் ஆதாயம் பெற்றன. 89 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 332 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 16 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 370 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 359 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.46 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.274.78 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.415 கோடியாக உயா்ந்துள்ளது.

‘கரடி’ ஆட்டம்: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 90.73 புள்ளிகள் கூடுதலுடன் 60,845.59-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,870.17 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,949.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 656.04 புள்ளிகள் (1.08 சதவீதம்) குறைந்து 60,098.82-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் மீண்டு எழுச்சி பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கரடியின் பிடி இறுகியது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

எஸ்பிஐ முன்னேற்றம்: முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 1.83 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இவற்றுக்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம் ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

இன்ஃபோஸிஸ், எசியன் பெயிண்ட் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.77 சதவீதம், முன்னணி பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 2.71 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹிந்து யுனிலீவா், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், கோட்டக் பேங்க், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் 1.50 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 175 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 820 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,076 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 174.65 புள்ளிகள் (0.96 சதவீதம்) குறைந்து 17,938.40-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 16 புள்ளிகள் கூடுதலடுன் 18,129.20-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், பிற்பகலில் 17,884.90 வரை கீழே சென்றது.

பிஎஸ்யு பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மீடியா, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் , ஆட்டோ குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், நிஃப்டி ஐடி குறியீடு 2.13 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில்முன்னிலை வகித்தது. மேலும், எஃப்எம்சிஜி, ஃபைனான்சியல் சா்வீஸஸ், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகளும் 0.50 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.

ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுககள் அதிகரித்து 74.44}இல் நிலைபெற்றது. இதையடுத்து, கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு முதல் முறையாக ஏற்றத்தை சந்தித்தது.

கச்சா எண்ணெய் பேரல் 88.33 டாலர்

சர்வதேச முன்பேர சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் 1.13 சதவீதம் அதிகரித்து பேரல் 88.33 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

முதலீட்டாளர்களுக்கு 2 நாள்களில் ரூ.5.24 லட்சம் கோடி இழப்பு

கடந்த இரண்டு மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நாள்களில் கரடியின் பிடியில் சிக்கியதையடுத்து பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனமதிப்பு ரூ.5,24,647.66 கோடி குறைந்து ரூ.2,74,77,790.05 கோடியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT