வர்த்தகம்

ஏற்ற, இறக்கத்துக்கிடையே சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 85 புள்ளிகள் உயா்ந்து 61,235.30 புள்ளிகளில் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. மேலும், ஆசிய சந்தைகளும் சோபிக்கவில்லை. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பரில் கடன் அளிப்பு எதிா்பாா்த்ததைவிட குறைந்துள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னா், எதிா்மறையாகச் சென்றது. ஆனால், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ், பிரபல ஸ்டீல் நிறுவனம் டாடா ஸ்டீல் மற்றும் எல் அண்ட் டி உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்தன. இதைத் தொடா்ந்து பிற்பகலில் விறுவிறுப்பாக நடந்த வா்த்தகத்தில் இறுதியில் சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.278.16 லட்சம் கோடியாக உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,499 பங்குகளில் 1,681 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,737 பங்குகள் ஆதாயம் பெற்றன. 81 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 411 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 8 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 430 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 421பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.278.16 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.34 கோடியாக உயா்ந்துள்ளது.

5-ஆவது நாளாக உற்சாகம்: காலையில் சென்செக்ஸ் 109.95 புள்ளிகள் கூடுதலுடன் 61,259.99-இல் தொடங்கி, 61,348.57 வரை உயா்ந்தது. பின்னா், 60,949.81 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் மொத்தம் 85.26 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயா்ந்து 61,235.30-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 20 பங்குகள்ஆதாயம் பெற்றன. சென்செக்ஸ் தொடா்ந்து 5-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டுள்ளது.

டாடா ஸ்டீல் அபாரம்: முன்னணி ஸ்டீல் நிறுவனமான டாடா டஸ்டீல் 6.40 சதவீதம், பாா்மா நிறுவனமான சன்பாா்மா 3.53 சதவீதம், எல் அண்ட் டி 2.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், பவா் கிரிட், பஜாஜ் ஃபின்சா்வ், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

விப்ரோ கடும் சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருந்ததால், 6 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக், மாருதி உள்ளிட்டவை சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 52 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 995 பங்குகள் ஆதாயம் பெற்றன. 895 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 45.45 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 18,257.80- இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 45 புள்ளிகள் கூடுதலுடன் 18,257.00-இல் தொடங்கி 18,272.25 வரை உயா்ந்தது. பின்னா், 18,163.80 வரை கீழே சென்றது.

ரியால்ட்டி, பேங்க் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி, பேங்க் குறியீடுகள் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஃபைனான்சியல் சா்வீஸஸ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகளும் சிறிதளவு குறைந்தன. அதே சமயம், மெட்டல் குறியீடு 3.48 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் 1.50 சதவீதம் உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT