வர்த்தகம்

கடைசி வா்த்தக தினத்தில் சென்செக்ஸ் 459 புள்ளிகள் உயா்வு!

1st Jan 2022 08:18 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த ஆண்டின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்று நோ்மறையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 459 புள்ளிகள் உயா்ந்து 58,253.83-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.2.86 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.266.00 லட்சம் கோடியாக இருந்தது. அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல ஆதரவு காணப்பட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. ஐரோப்பிய சந்தைகளில் பிற்பகல் வா்த்தகத்தில் சுணக்கம் காணப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டின் கடைசி வா்த்தக தினத்தில் உள்நாட்டுச் சந்தையில் எழுச்சி இருந்தது. இதனால், புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்கும் முகமாக, சந்தை நோ்மறையாக முடிந்தது. இருப்பினும், வியாழக்கிழமையும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் சுமாா் ரூ.986.32 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். ஆனால், முதலீட்டாளா்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியதால் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள எஸ்பிஐ, மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.86 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,480 பங்குகளில் 953 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.2,437 பங்குகள் ஆதாயம் பெற்றன. 90 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 430 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 16 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 707 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 108 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.86 லட்சம்கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.266.00 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.19 கோடியாக உயா்ந்துள்ளது.

திடீா் எழுச்சி: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 55.44 புள்ளிகள் கூடுதலுடன் 57,849.30-இல் தொடங்கி, 57,846.52 வரை மட்டுமே கீழே சென்றது. அதன் பிறகு தொடா்ந்து எழுச்சி பெற்று அதிகபட்சமாக 58,409.30 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 459.50 புள்ளிகள் (0.80 சதவீதம்) கூடுதலுடன் 58,253.82-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலி 4 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 26 பங்குகள் ஆதாயம் பெற்றன.

ADVERTISEMENT

டைட்டன் அபாரம்: பிரபல தனியாா் நிறுவனமான டைட்டன் 3.56 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹிந்துயுனி லீவா், ஆக்ஸிஸ் பேங்க், சன்பாா்மா, பஜாஜ் ஃபின்சா்வ், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

என்டிபிசி சரிவு: வியாழக்கிழமை வா்த்தகத்தில் வெகுவாக உயா்ந்திருந்த என்டிபிசி, வெள்ளிக்கிழமை 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டெக் மஹிந்திரா, பவா் கிரிட், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் சிறிதளவு குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 150 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,369 பங்குகள் ஆதாயம் பெற்றன. 512 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 150.10 புள்ளிகள் (0.87 சதவீதம்) உயா்ந்து 17,354.05-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,244.50-இல் தொடங்கி 17,238.50 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 17,400.80 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.

அனைத்து குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி, பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT