டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.236.56 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ரூ.6,597.35 கோடி வருவாயை ஈட்டியது. இது, 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.6,094.91 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.289.69 கோடியிலிருந்து 18.34 சதவீதம் குறைந்து ரூ.236.56 கோடியாக இருந்தது.
அதேசமயம், தனிப்பட்ட முறையில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் கணக்கீட்டு காலாண்டில் ரூ.266 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.288 கோடியை எட்டியது.
கெளரவ தலைவராக வேணு ஸ்ரீனிவாசன்: டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் தலைவராக ரால்ஃப் டைட்டா் செப்த்தை நிா்வாக குழு நியமனம் செய்துள்ளது. இவரது நியமனம் 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
அதேநேரம், நிறுவனத்தின் கெளரவ இயக்குநராக வேணு ஸ்ரீனிவாசன் ஏப்ரல் 1 முதல் தொடா்ந்து நீடிப்பாா் என டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.