வர்த்தகம்

கடைசி நேர ஆதரவால் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்வு: 3 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி

9th Feb 2022 03:31 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 57,808-இல் நிலைபெற்றது.
 உலக அளவில் பெரும்பாலான சந்தைகள் நேர்மறையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையும் உற்சாகத்துடன் தொடங்கியது. 2022-23 பட்ஜெட், பணவீக்கம் குறித்த கவலைகள், ரஷியா-அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலின் பின்னணியில், மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் சந்தையில் எதிரொலித்தது. அதாவது சந்தை தொடங்கிய சிறிது நேரத்தில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதனால், பெரும்பாலான நேரம் சந்தை எதிர்மறையாகவே வர்த்தகமாகியது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில், ஏற்கெனவே பங்குகளை விற்றிருந்தவர்கள் கணக்கை சரி செய்ய அவசர அவசரமாக பங்குகளை வாங்க முன்வந்ததால், சந்தை ஏற்றம் பெற்று நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி நிதி நிறுவனங்களான பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்து சந்தை மீள்வதற்கு உதவியாக இருந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 2,238 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,411 நிறுவனப் பங்குகளில் 1,095 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,238 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன. 78 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 184 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 33 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.70 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில்
 ரூ.264.13 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.63 கோடி ஆனது.
 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 178.48 புள்ளிகள் கூடுதலுடன் 57,799.67-இல் தொடங்கி 57,058.77 வரை கீழே சென்றது. பின்னர்,அதிகபட்சமாக 57,925.82 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 187.39 புள்ளிகள் (0.33 சதவீதம்) கூடுதலுடன் 57,808.58-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் தொடங்கிய நிலையில் இருந்து சுமார் 740.90 புள்ளிகளை இழந்திருந்தது. அதன் பிறகு முன்னணி பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பால் சென்செக்ஸ் நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மூன்று நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 19 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
 டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள டாடா ஸ்டீல் 3.10 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ்
 ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், டைட்டன், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸýகி உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஐடிசி, விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
 பவர் கிரிட் சரிவு: அதே சமயம், கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பவர் கிரிட் 1.66 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 53 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 479 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,423 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 53.15 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயர்ந்து 17,266.75-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 65 புள்ளிகள் கூடுதலுடன் 17,279.89-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,306.45 வரை உயர்ந்தது. பின்னர்,
 கரடியின் தொடர் தாக்குதலால் 17,043.65 வரை கீழே சென்றது.
 மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.80 சதவீதம் வரை உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்தன. அதே சமயம், மீடியா குறியீடு 1.03 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 0.84 சதவீதம் குறைந்தன.
 ஐடி, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT