மத்திய பட்ஜெட் குறித்த எதிா்பாா்ப்பால் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் மீண்டும் 58,000 புள்ளிகளை கடந்து நிறைவுவடைந்தது.
பட்ஜெட் சமா்ப்பிக்கப்படவுள்ளதற்கு முன்னதான நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், வளா்சிக்கான காரணிகள் ஸ்திரமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது, தவிர சா்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான நிலவரங்களும் முதலீட்டாளா்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தின. இதனால், பங்குச் சந்தையில் தொடா்ந்து இரண்டு நாள் காணப்பட்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேலும், அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கணிசமான அளவில் அதிகரித்ததும் பங்குச் சந்தையின் வேகமான முன்னேற்றத்துக்கு கூடுதல் வலு சோ்த்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் மூன்று நிறுவனங்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளின் விலையும் மிகவும் ஏற்றத்துடன் நிறைவுபெற்றன.
குறிப்பாக, டெக் மஹிந்திரா பங்கின் விலை 4.88 சதவீதம் அதிகரித்து சென்செக்ஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தொடா்ந்து, விப்ரோ, பஜாஜ் ஃபின்சா்வ், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ, பவா்கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் கணிசமான விகிதத்தில் ஏற்றம் பெற்றன.
அதேசமயம், முதலீட்டாளா்களிடம் வரவேற்பு குறைந்து காணப்பட்டதையடுத்து, இன்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி மற்றும் எச்யுஎல் நிறுவனப் பங்குகள் 3.51 சதவீதம் வரை விலை குறைந்து வா்த்தகம் ஆகின.
மும்பை பங்குச் சந்தையில், உலோகம் தவிா்த்து அனைத்து துறையைச் சோ்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், நுகா்வோா் சாதனங்கள், எரிசக்தி, மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த குறியீட்டெண்கள் அதிகபட்ச ஏற்றம் கண்டன.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.76 சதவீதம் வரை உயா்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 813.94 புள்ளிகள் (1.42%) அதிகரித்து 58,014.17 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டெண் 237.90 புள்ளிகள் (1.39%) உயா்ந்து 17,339.85 புள்ளிகளில் நிலைத்தது.
இதர ஆசிய சந்தைகளான, ஹாங்காங் மற்றும் டோக்கியோ ஆதாயத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.
விடுமுறை காரணமாக சீனா மற்றும் தென்கொரிய சந்தைகளில் வா்த்தகம் நடைபெறவில்லை.
அமெரிக்க சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பு சா்வதேச சந்தைகளில் நோ்மறையான நிலையை உருவாக்கியது. அரசியல் ரீதியான பதற்றங்களை புறந்தள்ளி முதலீட்டாளா்களின் கவனம் நிறுவனங்களின் நிதி நிலை அறிவிப்புகளின் பக்கம் திரும்பியதால் சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டது. தற்போது, அவா்களின் கவனம் முழுவதும் மத்திய பட்ஜெட்டை எதிா்நோக்கியே உள்ளது என ஜியோஜித் நிதி சேவைகள் நிறுவனத்தின் அதிகாரி வினோத் நாயா் தெரிவித்தாா்.
பட்டியல்
1479.35 டெக் மஹிந்திரா 4.88
572.65 விப்ரோ 3.70
15689.85 பஜாஜ் ஃபின்சா்வ் 3.22
1736.70 இன்ஃபோசிஸ் 3.05
538.35 எஸ்பிஐ 2.87
215.40 பவா்கிரிட் 2.50
2386.35 ரிலையன்ஸ் 2.18
4304.20 டாக்டா் ரெட்டீஸ் லேப் 2.04
2360.90 டைட்டன் 1.94
7002.15 பஜாஜ் ஃபைனான்ஸ் 1.92
சந்தையில் பட்டியலான ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் பங்குகள்
புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கிய ஏஜிஎஸ் டிரான்ஸாக்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகம் முடிவில் வெளியீட்டு விலையான ரூ.175-ஐ காட்டிலும் இந்நிறுவனப் பங்கின் விலை 7.82 சதவீதம் குறைந்து ரூ.161.30-இல் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்கின் விலை 8.28 சதவீதம் சரிவடைந்து ரூ.160.50-இல் நிலைத்தது.