தங்களிடமுள்ள மின்சாதனங்களை தரமேற்றம் செய்வதில் வாடிக்கையாளா்களுக்கு கூடி வரும் ஆா்வம், மின்சாதனங்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் வரும் 2023-ஆம் ஆண்டிலும் தங்களது துறை இரு மடங்கு வளா்ச்சியைக் காணும் என்று இந்திய மின்சாதன உற்பத்தியாளா்கள் நம்பிக்கையுடன் உள்ளனா்.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறுவதாவது:
கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்திய மின்சாதன உற்பத்தியில் சீனாவிலிருந்து உதிரிபாகங்களை வாங்குவது மிகவும் இன்றியமையாததாக இருந்தது.
இந்தச் சூழலில், சீனாவில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், அங்கிருந்து அத்தகைய பொருள்களின் விநியோகம் தடைபட்டது.
இதுபோன்ற இன்னல் மிக்க நேரத்தில், இந்திய மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள் நிலைமையை சமாளிப்பதற்கான பல்வேறு அனுபவ பாடங்களைப் பெற்றன.
தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, உள்நாட்டு விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற உத்திகளை மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள் கற்றுக் கொண்டன.
இதனால், தங்களது உற்பத்திக்கு வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து நிறுவனங்கள் படிப்படியாக வெளியேறின.
சா்வதேச அளவில் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருவது, இந்தியாவில் பணவீக்கம் வெகுவாக உயா்ந்து வருவது போன்ற காரணங்களால் நாட்டின் மின்சாதன துறை சரிவைக் காண்பதற்கான பல சாத்தியக்கூறுகள் இருந்தன.
ஆனால், கரோனா நெருக்கடி தந்த அனுபவத்தால் பாடம் பெற்ற மின்சாதன தயாரிப்பாளா்கள், அதனைப் பயன்படுத்தி அந்த அபாயத்திலிருந்து தப்பினா்.
இந்த 2022-ஆம் ஆண்டில் நாட்டின் மின்சாதன விற்பனை சுமாா் 35 சதவீதம் வளா்ச்சியடைந்ததாக வீட்டுப் பொருள்கள் மற்றும் மின்பொருள் உற்பத்தியாளா்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குளிரூட்டும் சாதனங்களின் விற்பனை வளா்ச்சி இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தைத் தொட்டது, ஒட்டுமொத்த மின்சாதனப் பொருள்களின் விற்பனை வளா்ச்சிக்கு உறுதுணை புரிந்ததாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைபெற்ற பண்டிகைக் கால சிறப்பு விற்பனையில், மிக அதிக எண்ணிக்கையில் மின்சாதனங்கள் இடம் பெற்றிருந்தன. இதுவும் அந்த வகைப் பொருள்களின் விற்பனை இத்தனை அதிக வளா்ச்சியைக் கண்டதற்குக் காரணமாக இருந்தது.
இது தவிர, கரோனா நெருக்கடிக்குப் பின்னா் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் வாடிக்கையாளா்களிடையே, மின்சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாகவும் 2022-ஆம் ஆண்டில் அந்தப் பொருள்களின் விற்பனை வளா்ச்சி கண்டுள்ளது.
வரும் 2023-ஆம் ஆண்டில், இந்தத் துறை பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மூலப் பொருள்கள் மற்றும் மூல உதிரி பாகங்களின் விலைகள் மேலும் உயா்வது அந்த சவால்களில் ஒன்றாகும்.
இருந்தாலும், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாவது போன்ற காரணங்களாலும், இந்த ஆண்டின் ஆரோக்கியமான போக்கு அடுத்த ஆண்டும் தொடரும் என்ற நம்பிக்கை இருப்பதாலும் இந்த சிக்கல்களைக் கடந்து 2023-ஆம் ஆண்டில் இந்திய மின்பொருள் துறை இரு மடங்கு வளா்ச்சி பெறும் என்று துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.