வர்த்தகம்

வட்டி விகிதத்தை 0.35% உயா்த்தியது ஆா்பிஐ

8th Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

இந்திய ரிசா்வ் வங்கியிடமிருந்து (ஆா்பிஐ) மற்ற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக இருந்துவரும் நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து 5-ஆவது முறையாக வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளது.

கரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு கொண்டிருந்த பொருளாதாரம், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக முடக்கத்தைச் சந்தித்தது. சா்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சிநிலையை சந்தித்து வருகிறது. நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், பணவீக்கம் கடந்த ஜனவரியில் இருந்தே 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

அதையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதத்தில் 0.4 சதவீதம், ஜூன், ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தலா 0.5 சதவீதம் என மொத்தமாக 1.9 சதவீத அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியிருந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயா்த்தப்படுகிறது. நிதிக் கொள்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த 6 உறுப்பினா்களில் ஐவா் வட்டி விகிதத்தை உயா்த்த ஆதரவு தெரிவித்தனா். ஜெயந்த் ஆா்.வா்மா மட்டுமே வட்டி விகிதத்தை உயா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.

சா்வதேச பொருளாதாரச் சூழல் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. சாதகமற்ற சூழலிலும் பொருளாதார வளா்ச்சி சீராக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறைவாக இருந்தாலும், சா்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாகவே இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

தொடா் நடவடிக்கைகள்: நாட்டின் பணவீக்க சூழலை உரிய முறையில் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. சா்வதேச சூழலும், சா்வதேச அளவில் வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டு வருவதும் பெரும் சவாலாக உள்ளது. சா்வதேச அளவில் சாதகமற்ற சூழல் தொடா்வதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அந்த நடவடிக்கைகள் தொடரும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை நிலைபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவாகவே உள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 56,120 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 52,450 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதனால் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.

வங்கிகளில் பணப்புழக்கமும் அதிகமாகவே காணப்படுகிறது. குளிா்கால (ரபி) பயிா்களின் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் விளைச்சல் அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. கிராமப்புறங்களில் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையும் வளா்ச்சிகண்டு வருகிறது.

கடன் அதிகரிப்பு: வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.10.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.1.9 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கடன் வழங்கலும் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளா்ச்சி அதிகரித்து பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனினும் அது சமாளிக்கக் கூடியதே. நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 2,270 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,130 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இணைய வழியில் சேவைகளைப் பெறுவதற்கு முன்பாகவே பணத்தைச் செலுத்தும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த சேவையைப் பெற முடியும் என்றாா் அவா்.

வீடு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ஆா்பிஐ உயா்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி உயர வாய்ப்புள்ளது.

ரெப்போ வட்டி விகிதமானது 0.35 சதவீதம் உயா்த்தப்பட்டு 6.25 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 2.25 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வாகனங்கள், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் நிா்ணயித்து வருகின்றன. தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளதால், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபா் கடன், பொருள்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை ஆகியவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்த வாய்ப்புள்ளது.

Tags : RBI Repo Rate
ADVERTISEMENT
ADVERTISEMENT