வர்த்தகம்

வட்டி விகித உயர்வு எதிரொலிலி: சென்செக்ஸ் 216 புள்ளிகள் வீழ்ச்சி

8th Dec 2022 03:15 AM |    நமது நிருபர்

ADVERTISEMENT

மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகித உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை நான்காவது நாளாக புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216 புள்ளிகளை இழந்தது. 8 நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
 மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 35 அடிப்படை பள்ளிகள் (0.35 சதவீதம்) உயர்த்தியதையடுத்து பங்குச் சந்தையில் எதிர்மறையாக செயல்படத் தொடங்கியது.
 மேலும், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய இறுக்கம் காரணமாக நிகழ் நிதியாண்டிற்கான நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி 6.8 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை விற்கத் தொடங்கியதும் முதலீட்டாளர்களின் உணர்வை பாதித்தது. இருப்பினும், எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 
 சென்செக்ஸ் மேலும் சரிவு: காலையில் 10.84 புள்ளிகள் குறைந்து 62,615.52-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 62,759.97 வரை மேலே சென்றது. ஆனால், ஆர்பி அறிவிப்புக்குப் பிறகு 62,316.65 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 215.68 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 62,410.68-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 ஏசியன் பெயிண்ட், ஹெச்யுஎல் அபாரம்: முன்னணி பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட், முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) 2.10 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி உள்ளிட்டவை 0.80 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 என்டிபிசி, ரிலையன்ஸ் சரிவு: அதே சமயம், பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 2 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சர்வ், இண்டஸ் இண்ட் பேங்க், சன்பார்மா, டாடா ஸ்டீல், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை 1.50 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்சிஎல் டெக், கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, பாஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.288.99 லட்சம் கோடியாக குறைந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.635.35 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 நிஃப்டி 82 புள்ளிகள் சரிவு: நிஃப்டி 18,638.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,668.30 வரை மேலே சென்றது. பின்னர், 18,528.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 82.25 புள்ளிகள் (0.44 சதவீதம்) குறைந்து 18,560.25-இல் நிலைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT