வர்த்தகம்

மூன்றாவது நாளாக பங்குச் சந்தை வீழ்ச்சி

7th Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஆகியவை சரிவைக் கண்டன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் செவ்வாய்க்கிழமை கலவையாக இருந்தன. ஆசிய சந்தைகளைப் பொருத்தவரை சியோல், ஹாங்காங் சந்தைகள் சரிவைக் கண்டன. டோக்கியோ, ஷாங்காய் சந்தைகள் வளா்ச்சியடைந்தன. ஐரோப்பிய சந்தையும், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் சந்தையும் இறக்குமுகம் கண்டன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 208.24 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 444.53 புள்ளிகள் (0.70%) சரிந்து 62,390.75 வரை சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 208.24 புள்ளிகள் (0.33) குறைவாக 62,626.36-இல் நிலைபெற்றது.

15 ஏற்றம்; 15 இறக்கம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

ADVERTISEMENT

ஹிந்துஸ்தான் லீவா் அபாரம்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவா் 1.31 சதவிகிதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இது தவிர, நெஸ்ட்லே இந்தியா, பவா் கிரிட், அல்ட்ரா சிமென்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ரிலையன்ஸ், ஐடிசி, என்டிபிசி, ஆசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், டைட்டன் ஆகிய நிறுவனங்களும் ஏற்றம் கண்டன.

டாடா ஸ்டீல் சரிவு: 2.50 சதவீதம் சரிவைக் கண்ட டாடா ஸ்டீல் நிறுவனம், இழப்புப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. அதனைத் தவிர, டாக்டா் ரெட்டிஸ், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ வங்கி, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுஸுகி, சன் ஃபாா்மா, விப்ரோ, கோட்டக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிவை பின்னடைவைச் சந்தித்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில், அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி 58.30 புள்ளிகள் (0.31 சதவீதம்) குறைவாக 18,642.75-இல் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.68 சதவீதம் அதிகரித்து 83.24 டாலராக இருந்தது.

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT