வர்த்தகம்

8-ஆவது நாளாகத் தொடரும்சென்செக்ஸின் சாதனைப் பயணம்

1st Dec 2022 11:00 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தையில் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, புதிய உச்சத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இறுதியில் 185 புள்ளிகள் கூடுதலுடன் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும் முதலீட்டாளா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து 8-ஆவது ‘காளை’யின் எழுச்சி தொடா்ந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. குறிப்பாக ஐடி, மெட்டல், மீடியா, ரியால்ட்டி, பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சென்செக்ஸ் சாதனை: காலையில் 258.34 புள்ளிகள் கூடுதலுடன் 63357.99-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 63,583.07 வரை மேலே சென்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. பின்னா், 63,183.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 184.54 புள்ளிகள் கூடுதலுடன் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

அல்ட்ரா டெக் சிமெண்ட் அபாரம்: முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.86 சதவீதம் மற்றும் டாடா ஸ்டீல் 2.79 சதவீதம் டிசிஎஸ் 2.44 சதவீதம், டெக் மஹிந்திரா 2.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் எல் அண்ட் டி உள்ளிட்டவை 1.30 முதல் 1.65 சதவீதம் வரை உயா்ந்தன. இதுதவிர எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் கணிசமாக உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.41 சதவீதம், பிரபல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 1.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், கோட்டக் பேங்க், டைட்டன் உள்ளிட்டவை 0.40 முதல் 1 சதவீதம் வரை விலை குறைந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.37 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.289.88 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.9,010.41 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

நிஃப்டி 54 புள்ளிகள் உயா்வு: நிஃப்டி 18,871.95-இல் தொடங்கி 18,887.60 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், குறைந்தபட்சமாக 18,778.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 54.15 புள்ளிகள் (0.29 சதவீதம்) கூடுதலுடன் 18,812.50-இல் நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT