வர்த்தகம்

63,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை: வரலாற்றில் முதல் முறை

1st Dec 2022 03:29 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 தொடர்ந்து 7-ஆவது நாளாக "காளை'யின் எழுச்சி தொடர்ந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
 சென்செக்ஸ் வரலாற்று சாதனை: காலையில் 61.63 புள்ளிகள் கூடுதலுடன் 62,743.47-இல் தொடங்கிய சென்செக்ஸ், 62,648.38 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 63,303.01 வரை உயர்ந்து புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இறுதியில் சென்செக்ஸ் 417.81 புள்ளிகள் கூடுதலுடன் 63,099.65-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
 எம் அண்ட் எம் அபாரம்: முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 4.00 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவீதம், பவர் கிரிட் 2.14 சதவீதம் உயர்ந்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனி லீவர், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 1.50 முதல் 1.180 சதவீதம் வரை உயர்ந்தன. ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 1.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இரண்டாவது நாளாக முன்னிலை வகித்தது. மேலும், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், ஐடிசி, சன்பார்மா, பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்டவை 0.40 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.36 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.288.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,241.57 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
 நிஃப்டி 140 புள்ளிகள் உயர்வு: நிஃப்டி 18,625.70-இல் தொடங்கி 18,616.55 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 18,816.05 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி, இறுதியில் 140.30 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்ந்து 18,758.35-இல் நிலைபெற்றது.

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT