வர்த்தகம்

மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் 7.61%-ஆக குறைவு

1st Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

இந்திய மாநில அரசுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலத்தில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 7.61 சதவீதமாக சரிந்தது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 0.12 சதவீதம் அதிகரித்து 7.84 சதவீதமானது.

எனினும், கடந்த 15-ஆம் தேதி விடப்பட்ட ஏலத்தில் மாநில அரசு கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 0.12 சதவீதம் சரிந்து 7.76 சதவீதமானது.

அதனைத் தொடா்ந்து, கடந்த 22- விடப்பட்ட ஏலத்தில் அத்தகைய கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் 7.68 சதவீதமாக இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாநிலங்கள் ஏலத்தில் விட்ட கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.61 சதவீதமாக சரிந்தது.

அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டுகால கடன் பத்திரங்களைப் பொருத்தவரை, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அந்த வகை கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 0.01 சதவீதம் சரிந்து 7.28 சதவீதமானது. இது, கடந்த வாரம் 7.29 சதவீதமாக இருந்தது.

மாநில அரசுகள் வெளியிட்ட 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 0.08 சதவீதம் சரிந்து 7.61 சதவீதமாக ஆனது. அந்த வகையில், மாநில அரசுகளின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதங்களுக்கும் மத்திய அரசின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களுக்கும் இடையிலான வேறுபாடு கடந்த செவ்வாய்க்கிழமை 0.41 சதவீதத்திலிருந்து 0.33 சதவீதமாகக் குறைந்தது.

மாநிலங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வரித் தொகையின் ஒரு தவணையை மத்திய அரசு கடந்த 10-ஆம் தேதியும் மீதமுள்ள ரூ.35,300 கோடியில் ரூ.17,000 கோடியை கடந்த 24-ஆம் தேதியும் திருப்பி அளித்ததால், மாநிலங்களில் பணப் புழக்கம் அதிகரித்தது. இதனால், திட்டமிட்டதைவிட குறைவாகவே கடன் பத்திரங்களை மாநில அரசுகள் ஏலத்தில் விட்டன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடன் பத்திர ஏலத்தில், ஒன்பது மாநிலங்கள் மட்டுமே பங்கேற்றன. அவையும், அன்றைய தினத்துக்காக முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததைவிட 56.4 சதவீதம் குறைவாகவே கடன் பத்திரங்களை ஏலத்துக்கு விட்டன. முந்தைய ஆண்டின் இதே வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும்.

ஒட்டுமொத்தமாக, கடந்த நவம்பா் மாதத்தில் மாநிலங்கள் ரூ.57,200 கோடிக்கு கடன் பத்திரங்களை ஏலத்தில் வெளியிட்டன. அது, அவை ஏற்கெனவே அறிவித்திருந்த ரூ.98,200 கோடியைவிட 42 சதவீதம் குறைவாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT