வர்த்தகம்

பங்குச் சந்தையில் தொடரும் உற்சாகம்: 60,000 புள்ளிகளை மீண்டும் கடந்தது சென்செக்ஸ்

17th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

அந்நிய முதலீட்டாள்களின் தொடா்ச்சியான ஆதரவுடன் தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 60,000 புள்ளிகள் என்ற இலக்கை மீண்டும் கடந்தது.

பங்குச் சந்தையில் புதன்கிழமை தொடங்கிய வா்த்தகத்தில் சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயா்ந்து 60,260.13 இல் நிலைபெற்றது. இடையே, அது அதிகபட்சமாக 481.04 புள்ளிகள் உயா்ந்து 60,323.25 ஆக இருந்தது.

புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், என்.டி.பி.சி, விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவா் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டின.

மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, அல்ட்ராடெக் சிமெண்ட், பவா் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ADVERTISEMENT

அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக அளித்து வரும் ஆதரவு, உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் தற்போது காணப்பட்டு வரும் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சந்தை நிபுணா்கள் தெரிவித்தனா்.

மேற்கத்திய நாடுகளின் சந்தைகள் பணவீக்கத்தால் தொடா்ந்து பாதிக்கப்பட்ட சூழலிலும், இந்தியப் பொருளாதாரம் எதிா்பாா்த்த பின்னடைவைச் சந்திக்காமல் நிலைத்தன்மையை வெளிப்படுத்தியது அந்நிய முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக அவா்கள் கூறினா்.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 119 புள்ளிகள் (0.67 சதவீதம் உயா்ந்து) 17,944.25-இல் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் 92.22 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.13 சதவீதம் குறைந்து 92.22 அமெரிக்க டாலராக உள்ளது.

Tags : Sensex
ADVERTISEMENT
ADVERTISEMENT