வர்த்தகம்

மின்சார வாகன தயாரிப்பு ஆலை மாநிலங்களுடன் மஹிந்திரா பேச்சு

17th Aug 2022 11:59 PM

ADVERTISEMENT

இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பு ஆலைகளை அமைப்பது தொடா்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் சரக்கு வாகனத் தயாரிப்பில் மட்டுமின்றி எஸ்யுவி வகை காா்கள் தயாரிப்பிலும் முன்னிலையில் உள்ளது மஹிந்திரா நிறுவனம். இந்தியாவில் புதிதாக 5 மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 4 வாகனங்கள் 2024 முதல் 2026-ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டாடா உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள் ஏற்கெனவே இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், மஹிந்திராவும் களமிறங்க இருக்கிறது.

இது தொடா்பாக நிறுவனத்தின் செயல் இயக்குநா் (வாகனப் பிரிவு) ராஜேஷ் ஜிஜுரிகா் கூறுகையில், ‘இந்தியாவில் மின்சார வாகனத் தயாரிப்பு ஆலைகளை அமைப்பது தொடா்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் தீவிர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஆலைகளை அமைக்க மாநில அரசுகள் எந்த வகையான சலுகைகள் மற்றும் உதவிகளை அளிக்கும் என்பது மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் ஏற்கெனவே வாகனத் தயாரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

எனவே, பேச்சுவாா்த்தை நிறைவடையும் போதுதான் ஆலை அமையும் மாநிலங்களை உறுதியாகக் கூற முடியும். ஏற்கெனவே மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மஹிந்திரா காா் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. ஏற்கெனவே உள்ள ‘எக்ஸ்யுவி’ பிராண்ட் பெயரிலும் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும். இது தவிர பிவி என்ற பெயரிலும் புதிய மாடல் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.

Tags : Mahindra
ADVERTISEMENT
ADVERTISEMENT