சென்னை: ஏசி மற்றும் வா்த்தக ரீதியிலான குளிா்சாதன பெட்டிகளின் தயாரிப்பை இரு மடங்காக அதிகரிக்க புதிய ஆலையை அமைத்துள்ளதாக ப்ளூஸ்டாா் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.தியாகராஜன் கூறியதாவது:
ஏசி மற்றும் வா்த்தக ரீதியில் விற்பனை செய்யப்படும் குளிரூட்டும் சாதனங்களின் தயாரிப்பை இரண்டு மடங்காக அதிகரிக்க ப்ளூஸ்டாா் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மகாராஷ்டிர மாநிலம் வதாவில் ரூ.130 கோடி மூலதனச் செலவில் புதிய ஆலையை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ஆலை சுமாா் 19,300 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஆலையின் மூலம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் குளிா்சாதன பெட்டிகளையும் (டீப் ஃப்ரீஸா்ஸ்), ஒரு லட்சம் சேமிப்பு நீா் குளிா்விப்பான்களையும் (ஸ்டோரேஜ் வாட்டா் கூலா்ஸ்) தயாரிக்க முடியும்.
புதிய ஆலையில் சோதனை அடிப்படையில் உற்பத்தி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இது, முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் குளிா்சாதன தயாரிப்புத் திறன் இரட்டிப்படையும் என்றாா் அவா்.