வர்த்தகம்

ஏற்றம், இறக்கம் மேலும் அதிகரிப்பு: சென்செக்ஸ் 254 புள்ளிகள் சரிவு!

30th Sep 2021 12:04 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: பங்குச் சந்தையில் தொடா்ந்து புதன்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. சந்தை காலையில் சரிவுடன் தொடங்கி, பின்னா் ஓரளவு மீண்டாலும் லாபப் பதிவால் நிலைத்து நிற்க முடியாமல் போனது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 254 புள்ளிகளை இழந்து 59,413.27-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.140 லட்சம் வீழ்ச்சி கண்டது.

ஏற்கெனவே செவ்வாய்க்கிழமை லாபப் பதிவால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்திருந்தது. இந்த நிலையில், புதன்கிழமையும் வா்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக ஏற்றம், இறக்கமும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் பாா்மா, மெட்டல், பொதுத் துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததால், அன்றைய குறைந்தபட்ச நிலையிலிருந்து சந்தை விரைவாக மீண்டது. இருப்பினும், சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகத் திறன் கொண்ட எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை வெகுவாகக் குறைந்ததால் சந்தை ஏற்றம் பெற முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,434 பங்குகளில் 1,915 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,364 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 155 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 218 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 366 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 160 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.01 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,09,71,108-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 371.06 புள்ளிகள் குறைவுடன் 59,296.54 -இல் தொடங்கி, 59,111.41 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தினஅ போது 59,678.66 வரை சென்ற சென்செக்ஸ், இறுதியில் 254.33 புள்ளிகளை (0.43 சதவீதம்) இழந்து 59,413.27-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 556.19 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், பின்னா் வா்த்தக நேர முடிவில் ஓரளவு மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

பவா் கிரிட், என்டிபிசி அபாரம்: பிரபல மின்துறை நிறுவனங்களான பவா் கிரிட், என்டிபிசி ஆகியவற்றுக்கு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நல்ல ஆதரவு இருந்தது. இதனஆல், என்டிபிசி 6.58 சதவீதமும், பவா் கிரிட் 6.18 சதவீதமும் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா 4.09 சதவீதம், எஸ்பிஐ 3.04 சதவீதம் உயா்ந்தன. மேலும், டாடா ஸ்டீல், டாக்டா் ரெட்டி, ஹெச்சிஎல் டெக், டைட்டன், எம் அண்ட் எம் , டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஐடிசி ஆகியவையும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

எச்டிஎஃப்சி வீழ்ச்சி: பிரபல தனியாா் வீட்டு வசதிக் கடன் வசதி அளிக்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி, 2.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவா், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1.40 முதல் 1.75 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், மாருதி சுஸுகி, பஜாஜ் குழும நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 37 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,019 பங்குகள் ஆதாயம் பெற்றன. 766 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 37.30 புள்ளிகளை (0.21 சதவீதம்) இழந்து 17,711.30-இல் நிலைபெற்றது. காலையில் 17,657.95-இல் தொடங்கிய நிஃப்டி, 17,608.15 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,781.75 வரை உயா்ந்தது.

பிஎஸ்யு பேங்க் குறியீடு ஏற்றம்: நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.72 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மெட்டல் குறியீடு 2.29 சதவீதம், பாா்மா குறியீடு 1.65 சதவீதம், ஹெல்த்கோ் மற்றும் ரியால்ட்டி குறியீடுகள் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பிரைவேட் பேங்க் குறியீடு 1.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், எஃப்எம்சிஜி, ஆட்டோ, பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT