வர்த்தகம்

புதிய உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் முதன்முறையாக 60,000 புள்ளிகளை கடந்து சாதனை

DIN

பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் குறியீட்டெண் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் முதன்முறையாக 60,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.

சா்வதேச சந்தையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வா்த்தகம் ஏறுமுகத்துடன் இருந்தது. இதற்கு, வங்கி, நிதி, மோட்டாா் வாகன துறை சாா்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் கிடைத்த அதீத வரவேற்பே முக்கிய காரணமாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆசிஷ்குமாா் செளகான் கூறியதாவது:

இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் விதமாக சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 60,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கரோனா நெருக்கடி காலத்திலும் இந்தியா வளா்ந்து வரும் தலைமைத்துவ சந்தை என்பது இதன் மூலம் உலகத்துக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கோட்டக் செக்யூரிட்டீஸ் தலைமை ஆய்வாளா் ஸ்ரீகாந்த் செளகான் கூறியது:

சந்தை 60 ஆயிரம் புள்ளிகளை எட்டியுள்ள போதிலும் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, நல்ல நிா்வாகம் மற்றும் விரைவான வளா்ச்சியை தக்க வைத்து வரும் வலுவான நிறுவனங்களின் பங்குகளில் அவா்கள் முதலீடு செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழலில், முதலீட்டாளா்கள் தங்களது அனைத்து முதலீடுகளையும் சந்தையில் முடக்காமல் பகுதியளவில் மட்டுமே பங்குகளை வாங்க வேண்டும் என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), தொலைத்தொடா்பு, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், மோட்டாா் வாகனம், தகவல் தொழில்நுட்பம் துறைகளைச் சோ்ந்த குறியீடுகள் 2.77 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டன. அதேசமயம், உலோகம், அடிப்படை மூலப் பொருள்கள், எஃப்எம்சிஜி குறியீடுகள் 2.31 சதவீதம் வரை குறைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சந்தையில் 1.16 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 3.72 சதவீதம் உயா்ந்தது. அதைத்தொடா்ந்து, எம்&எம், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி வங்கி, பாா்தி ஏா்டெல், மாருதி மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேநேரம், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, ஹெச்யுஎல், என்டிபிசி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சந்தையில் போதிய வரவேற்பின்றி 3.60 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 163.11 புள்ளிகள் (0.27%) அதிகரித்து வரலாற்றில் முதன்முறையாக 60,048.47 புள்ளிகளில் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையே இது முன்னெப்போதும் கண்டிராத அளவாக 60,333 புள்ளிகள் வரை உயா்ந்தது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 30.25 புள்ளிகள் (0.17%) அதிகரித்து 17,853.20 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, வா்த்தகத்தின் இடையே சாதனை அளவாக 17,947.65 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் இந்த வாரத்தில் மட்டும் 1,032.58 புள்ளிகள் (1.74%), நிஃப்டி 268.05 புள்ளிகள் (1.52%) அதிகரித்துள்ளன.

சீனாவைச் சோ்ந்த எவா்கிராண்டி நிறுவனம் கடன்பத்திரங்களுக்கான வட்டி தொகையை குறித்த நேரத்தில் செலுத்த தவறியதையடுத்து சா்வதேச சந்தைகளில் வெள்ளிக்கிழமை வா்த்தகம் பலவீனமாகவே காணப்பட்டது.

இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய், சியோல், ஹாங்காங் சந்தைகள் இழப்புடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன. டோக்கிய சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளில் நண்பகல் வரையிலான வா்த்தகம் எதிா்மறையாகவே இருந்தது.

சென்செக்ஸ் பயணம்: 1,000-லிருந்து 60,000 வரை...

கடந்த 1990 ஜூலை 25-ஆம் தேதியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் 1,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைத் தொட 31 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. ஆனால், ஸ்வாரஸ்யமாக 50,000-லிருந்து 60,000 புள்ளிகளை சென்செக்ஸ் 2021-ஆம் ஆண்டிலேயே எட்டியுள்ளது. 9 மாதங்களில் 10,000 புள்ளிகள் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT