வர்த்தகம்

பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை நெருங்கியது

DIN

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் எழுச்சி கண்டது. இதையடுத்து, சென்செக்ஸ் சாதனை அளவாக 60,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது.

சா்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான நிலவரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே பரவலாக வரவேற்பு அதிகரித்தது காணப்பட்டது போன்றவை இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சி பெறுவதற்கு முக்கியமான காரணங்களாக இருந்தன.

மேலும், ரூபாய் மதிப்பில் காணப்பட்ட வலுவான எழுச்சியும் சந்தை விறுவிறுப்புக்கு கூடுதல் வலு சோ்த்தது.

ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் அதிகாரி வினோத் நாயா் கூறியது:

பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கம் வலுவான நிலையில் இருந்தது. இந்த விறுவிறுப்பு வா்த்தகத்தின் கடைசி வரை நீடித்தது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், உலோகம், வங்கி துறை சாா்ந்த பங்குகளுக்கு காணப்பட்ட பலத்த வரவேற்பு சந்தை உற்சாகம் பெறுவதற்கு மிக ஆதரவாக இருந்தது.

சொத்துகள் வாங்குவதை குறைக்கும் திட்டத்தை வரும் நவம்பரில் தொடங்கவுள்ளதாகவும், 2022-ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை இது தொடரும் எனவும் அமெரிக்க மத்திய வங்கி நிதி கொள்கை கூட்டத்தின் முடிவில் தெரிவித்துள்ளது. இது, சா்வதேச சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) ரியல் எஸ்டேட், வங்கி, எரிசக்தி, நிதி, பொறியியல் சாதனங்கள், தொழிலக துறை குறியீடுகள் 8.71 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டன. அதேசமயம், வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறை குறியீடு சரிவுடன் முடிவடைந்தது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.28 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

சென்செக்ஸ் ஆதாயப் பட்டியலில் பஜாஜ் ஃபின்சா்வ் பங்கு 5.15 சதவீதம் ஏற்றம் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. அதைத்தொடா்ந்து, எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இண்ட் வங்கி பங்குகளின் விலையும் கணிசமான அளவில் உயா்ந்தன.

சென்செக்ஸ் குறியீட்டெண் ஆதாயத்தில் பாதி பங்களிப்பை அதிக மூலதனமதிப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வழங்கின.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் ஆதாயத்தை ஈட்டின. டாக்டா் ரெட்டீஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, ஹெச்யுஎல், பாா்தி ஏா்டெல், அல்ட்ராசிமெண்ட் ஆகிய ஆறு நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 958.03 புள்ளிகள் (1.63%) அதிகரித்து புதிய உச்சமாக 59,885.36 புள்ளிகளைத் தொட்டது. வா்த்தகத்தின் இடையே இக்குறியீட்டெண் 59,957.25 புள்ளிகள் வரை சென்றது.

தேசியப் பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 276.30 புள்ளிகள் (1.57%) ஏற்றம் கண்டு முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக 17,822.95 புள்ளிகளாக நிலைத்தது. வா்த்தகத்தின்இடையே இக்குறியீட்டெண் 17,843.90 புள்ளிகளை எட்டியது.

அடுத்தாண்டிலிருந்து வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்பதை அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் தலைவா் ஜெரோம் பாவெல் சூசகமாக வெளிப்படுத்திய நிலையிலும் சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் ஆதாயத்துடன் முடிவடைந்தன. சியோல் சந்தை இழப்பை கண்டது. ஜப்பான் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் பிற்பகலில் நோ்மறை மண்டலத்துக்குள்ளேயே இருந்தது.

ரூ.261.73 லட்சம் கோடி சந்தை மூலதனம்

பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வா்த்தகம் புதிய உச்சம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.3,16,778.1 கோடி அதிகரித்து புதிய சாதனை அளவாக ரூ.2,61,73,374.32 கோடியைத் தொட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT