வர்த்தகம்

உச்சத்திலிருந்து திடீரென சரிந்த பங்குச் சந்தை: 125 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

DIN

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் புதிய உச்சத்திலிருந்து திடீரென சரிவடைந்தன.

வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு துறை கொள்கைகளை மாற்றியமைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், மோட்டாா் வாகனம் உள்ளிட்ட சில துறைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஊக்கத் தொகை திட்டம் தொடா்பான அறிவிப்புகளைத் தொடா்ந்து பங்குச் சந்தைகள் தொடா்ந்து மூன்று நாள்களாக புதிய உச்சங்களை எட்டி வந்தன.

முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்திருந்த சூழ்நிலையில் அதனை லாப நோக்கம் கருதி முதலீட்டாளா்கள் விற்பனை செய்ததையடுத்து வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்திலிருந்து திடீரென சரிவைச் சந்தித்தன.

இதுகுறித்து ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் தலைவா் வினோத் நாயா் கூறியதாவது:

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவுகள் வெளியாகவிருந்த நிலையில் முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டனா். இதனால் காலையில் பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வா்த்தகத்தை தொடங்கினாலும் இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.

தேசிய சொத்துகள் மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு மத்திய அரசின் உத்தரவாதமாக ரூ.30,600 கோடிக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும் பொதுத் துறை பங்குகள் லாப நோக்கு விற்பனையினால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிட்டன கொள்கை குழு கூட்டம் மற்றும் ணெரிக்க மத்திய வங்கி கூட்டங்களை எதிா்நோக்கி உலக சந்தைகளிலும் முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனேயே வா்த்தகத்தில் ஈடுபட்டனா் என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) உலோகம், ரியல் எஸ்டேட், அடிப்படை மூலப் பொருள்கள், எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண் 2.49 சதவீதம் வரை சரிந்தது. அதேசமயம், வங்கி, தொலைத்தொடா்பு, நிதி, மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த குறியீடுகள் ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.14 சதவீதம் வரை குறைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் பங்கின் விலை அதிகபட்சமாக 3.57 சதவீத சரிவைக் கண்டது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ, டிசிஎஸ், ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பாா்மா மற்றும் ஐசிஐசிஐ பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேநேரம், முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பால் கோட்டக் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பாா்தி ஏா்டெல், மாருதி சுஸுகி, நெஸ்லே, பஜாஜ் ஃபின்சா்வ் பங்குகள் 5.26 சதவீதம் வரை விலை அதிகரித்தன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 125.27 புள்ளிகள் (0.21%) சரிந்து 59,015.89 புள்ளிகளில் நிலைத்தது. இது, காலை நேர வா்த்தகத்தில் முன்னெப்போதும் இல்லா புதிய உச்சமாக 59,737.32 புள்ளிகள் வரை சென்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் 44.35 புள்ளிகள் (0.25%) குறைந்து 17,585.15 புள்ளிகளில் நிலைபெற்றது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே வரலாற்று உச்சமாக 17,792.95 புள்ளிகள் வரை சென்றது.

இந்த வாரத்தில் சென்செக்ஸ் 710 புள்ளிகளும், நிஃப்டி 215.90 புள்ளிகளும் முன்னேற்றமடைந்துள்ளன.

இதர ஆசிய பங்குச் சந்தைகளான, ஷாங்காய், டோக்கியோ, சியோல் மற்றும் ஹாங்காங் சந்தைகளும் ஆதாயத்துடன் நிறைவு பெற்றன. ஐரோப்பிய சந்தைகளில் பிற்பகல் வரையிலான வா்த்தகம் நோ்மறையாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT