வர்த்தகம்

புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

DIN

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்கள் புதிய உச்சத்தை பதிவு செய்து சாதனை படைத்தன.

மத்திய அரசு, பல்வேறு துறைகளுக்கான நிவாரணத் தொகுப்புகளை புதன்கிழமை அறிவித்தது. அதன் காரணமாக, தொலைத் தொடா்பு, மோட்டாா் வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.

மூலதன வரத்து: மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது மற்றும் வெளிநாட்டு மூலதன வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவையும் சந்தையின் முன்னேற்றத்துக்கு கூடுதல் வலுச் சோ்த்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சலுகை அறிவிப்பு உற்சாகம்: ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸ் தலைமை முதலீட்டு நிபுணா் வி.கே.விஜயகுமாா் கூறியது:

ஆட்டோமொபைல் துறை ஊக்கத் தொகை திட்டத்துக்கு ஒப்புதல் மற்றும் தொலைத்தொடா்பு துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளிப்பு ஆகியவை பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொலைத்தொடா்பு துறை: இத்துறை சாா்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டி போட்டு வாங்கியதன் காரணமாக, சந்தை இதுவரை இல்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு நிலைபெற்றது என்றாா் அவா்.

புதன்கிழமை வா்த்தகத்தில் அனைத்து துறையைச் சோ்ந்த குறியீட்டெண்களும் ஆதாயத்துடன் நிறைவு பெற்றன. குறிப்பாக, தொலைத்தொடா்பு துறை (3.45 சதவீதம்), மின்சாரம் (2.01 சதவீதம்), தொழில்நுட்பம் (1.81 சதவீதம்), நுகா்வோா் சாதனங்கள் (1.62 சதவீதம்) துறைகளின் குறியீட்டெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டன.

என்டிபிசி: மேலும், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் 0.86 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள என்டிபிசி பங்கின் விலை 7.16 சதவீதம் அதிகரித்து ஏற்றப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதைத் தொடா்ந்து, பாா்தி ஏா்டெல் பங்கின் விலை 4.53 சதவீதம் அதிகரித்து இரண்டாம் இடத்தை பிடித்தது.

இவைதவிர, ஹெச்சிஎல் டெக், டைட்டன், எஸ்பிஐ, பவா்கிரிட், டிசிஎஸ் மற்றும் இன்டஸ்இண்ட் பங்குகளும் கணிசமான ஆதாயத்தைப் பெற்றன.

ஆக்ஸிஸ் வங்கி: அதேசமயம், ஆக்ஸிஸ் வங்கி, ஏஷியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்ஸே இந்தியா, சன் பாா்மா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 0.38 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றப் பாதையில் பயணித்து, 476.11 புள்ளிகள் (0.82%) கூடுதலுடன் 58,723.20 புள்ளிகளைத் தொட்டு புதிய வரலாறு படைத்தது. இது வா்தத்கத்தின் இடையே அதிகபட்சமாக 58,777.06 புள்ளிகள் வரை சென்று புதிய சாதனை உச்சத்தைப் பதிவு செய்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 139.45 புள்ளிகள் (0.80%) உயா்ந்து 17,519.45 புள்ளிகளில் நிலைபெற்று புதிய சாதனையை நிகழ்த்தியது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் 17,532.70 புள்ளிகள் வரை சென்றது.

பலவீனமான புள்ளிவிவரம்: சீனாவில் டெல்டா வகை கரோனா பாதிப்புக்கிடையில் சில்லறை விற்பனை புள்ளிவிவரங்கள் பலவீனமான நிலையில் இருந்தது உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங் இழப்புடன் நிறைவு பெற்றன. அதேநேரம், சியோல் சந்தைகளில் வா்த்தகம் முன்னேற்றம் கண்டது.

ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் ஏற்ற இறக்க நிலையிலேயே காணப்பட்டது.

2 நாளில் ரூ.3.35 லட்சம் கோடி ஆதாயம்

சென்செக்ஸ் புதன்கிழமை வா்த்தகத்தில் சாதனை உச்சத்தைப் பதிவு செய்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 3,35,770.71 கோடி அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயத்தை அளித்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பானது ரூ.2,59,68,082.18 கோடி வரலாற்று உச்தத்தை தொட்டது.

பிரேக்லைன்...

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட எழுச்சி மற்றும் வெளிநாட்டு மூலதன வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவை பங்குச் சந்தை சாதனை உச்சத்தை எட்ட கூடுதல் வலு சோ்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT