வர்த்தகம்

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை: 3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

8th Sep 2021 03:55 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

 இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை
 பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு
 குறியீடுகளும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தாலும், வர்த்தக முடிவில் சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 17 புள்ளிகளையும், நிஃப்டி 16 புள்ளிகளையும் இழந்துள்ளன.
 இந்திய பங்குச் சந்தைகள் காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஐரோப்பிய சந்தைகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தெரிந்தது. குறிப்பாக ரியால்ட்டி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. இதனால், மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்து மூன்று நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.69 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,317 பங்குகளில் 1,333 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,844 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 201 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 261 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 193 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.69 ஆயிரம் கோடி குறைந்து ரூ.254.30 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 7,88,12,477-ஆக உயர்ந்துள்ளது.
 உச்சத்தில் லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 121.78 புள்ளிகள் கூடுதலுடன் 58,418.69 -இல் தொடங்கி, 58,005.07 வரை கீழே சென்றது. பின்னர், 58,553.07 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இருப்பினும், இறுதியில் 17.43 புள்ளிகளை (0.03 சதவீதம்) இழந்து 58,279.48-இல் நிலைபெற்றது.
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. காலை வர்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில், சென்செக்ஸ் 413.62 புள்ளிகளை இழந்திருந்தது.

 எச்டிஎஃப்சி முன்னேற்றம்: பிரபல தனியார் வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி 2.56 சதவீதம் உயர்ந்து ஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல் 2.48 சதவீதம், ஐடிசி 1.15 சதவீதம் உயர்ந்தன. இன்டஸ்இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், டைட்டன், ஏஷியன் பெயிண்ட்ஸ், மாருதி உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இருந்தன.
 சன் பார்மா வீழ்ச்சி: அதே சமயம், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சன்பார்மா அதிகபட்சமாக 1.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல்1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 16 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 575 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,204 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 15.70 புள்ளிகளை (0.09 சதவீதம்) இழந்து 17,362.10-இல் நிலைபெற்றது. காலையில் 17,401.55-இல் தொடங்கிய நிஃப்டி, 17,287.00 வரை கீழே சென்றது. பின்னர், 17,436.50 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
 நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 31 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி, ஃபைனான்சியல் சர்வீஸஸ், மீடியா தவிர மற்ற அனைத்து துறைசார் குறியீடுகளும் சிவப்புக் கம்பளத்தில் புகுந்தன. இதில், ரியால்ட்டி குறியீடு 2.33 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடி குறியீடு 1.31 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.25 சதவீதம் குறைந்தன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT