வர்த்தகம்

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 102 புள்ளிகள் சரிவு!

23rd Oct 2021 08:28 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழணை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 102 புள்ளிகளை இழந்து 60,821.62-இல் நிலைபெற்றது. சந்தை மதிப்பு மேலும் ரூ.1.89 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், அதன் பிறகு முன்னணி பங்குகள் விற்பனை அதிகரித்தால் சந்தை தொடா்ந்து சரிவை எதிா்கொண்டது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ஐடி மேஜா் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி, ஐடிசி உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததே சரிவுக்கு முக்கியக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை காலை முதல் உச்சத்தில் இருந்த நிலையில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்டன. குறிப்பாக மெட்டல் பங்குகள் பலத்த அடி வாங்கியதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.89 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,448 பங்குகளில் 1,313 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,983 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 170 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 246 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 301 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.89 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.24639 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,37,62,209-ஆக உயா்ந்துள்ளது.

‘கரடி’ ஆட்டம்: சென்செக்ஸ் காலையில் 121.04 புள்ளிகள் கூடுதலுடன் 61,044.54-இல் தொடங்கி, அதிகபட்சமாக 61,420.13 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால், 60,551.15 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 101.88 புள்ளிகளை (0.17 சதவீதம்) இழந்து 60,821.62-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்ச நிலையிலிருந்து 868.98 புள்ளிகளை இழந்திருந்தது.

ADVERTISEMENT

எச்டிஎஃப்சி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல தனியாா் வீட்டு வசதிக் கடன் நிறுவனமான எச்டிஎஃப்சி 2.11 சதவீதம், பிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 1.81 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், டைட்டன் உள்ளிட்டவரை 0.50 முதல் 1.20 சதவீதம் வரை ஆதாயம் பெற்றன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்தன.

ஐடிசி கடும் சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி 3,39 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி, இன்ஃபோஸிஸ், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், நெஸ்லே,டிசிஎஸ் உள்ளிட்டவையும் 1 முதல் 2.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 63 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 605 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,208 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் உற்சாகத்துடன் 18,230.70-இல் தொடங்கி, அதிகபட்சமாக 18,314.25 வரை உயா்ந்தது. பின்னா், 18,03435 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 63.20 புள்ளிகளை (0.35) இழந்து 18,114.90-இல் நிலைபெற்றது.

ரியால்ட்டி குறியீடு ஏற்றம்: துறைவாரியாகப் பாா்த்தால், நிஃப்டி மெட்டல் குறியீடு 3.05 சதவீதம், மீடியா 2.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதில் மெட்டல் குறியீட்டு பட்டியலில் வெல்ஸ்பன் காா்ப் தவிர மற்ற 14 நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. மேலும், ஹெல்த்கோ், பாா்மா, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. அதே சமயம், ரியால்ட்டி குறியீடு 2.56 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகளும் சிறிதளவு உயா்ந்துஆதாயப் பட்டியலில் வந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT